×

ஆந்திரா, பஞ்சாப் உள்பட 4 மாநிலங்களில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 11 நாடுகளில் விநியோகம் தொடங்கியது; அமெரிக்க-ஜெர்மனி நிறுவன தடுப்பூசிக்கு மவுசு அதிகம்

புதுடெல்லி: உலகளவில் கடந்த ஓராண்டாக கொரோனாவால் பல லட்சம் மக்கள் இறந்த நிலையில், தற்போது 11 நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. அமெரிக்க - ஜெர்மன் நிறுவன தடுப்பூசிக்கு சர்வதேச அளவில் மவுசு அதிகமாக உள்ளது. இந்தியாவில் நாளை 4 மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை தொடங்கவுள்ளது. ஓராண்டுக்கு மேலாக உலக மக்களை புரட்டி போட்டு வருகிறது கொரோனா. தற்போதைய நிலவரப்படி, 8,01,94,033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை  5,64,60,230 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 947 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,76,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,799 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (சி.எஸ்.எஸ்.இ) வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 86 லட்சத்தை எட்டியுள்ளது; 3,29,022 பேர் இறந்துள்ளனர். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,46,846-ஐ தாண்டியுள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை 1,47,092 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தற்போது, ​கொரோனா வைரஸ் தடுப்பூசியை உலகின் 11 நாடுகளில் முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்க - ஜெர்மனி நிறுவனமான ஃபைசர்-பயோ நோடெக் தயாரிக்கும் தடுப்பூசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவை பொருத்தமட்டில், ‘பாரத்பயோடெக்’  நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும் முதல் கட்டமாக மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது. வரும் ஜனவரியில் தடுப்பூசி விநியோகம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பு மருந்துகளை மக்களுக்கு செலுத்துவதற்கு முன்னதாக, இதற்கான ஒத்திகையில் ஈடுபட அனைத்து மாநிலங்களும்  திட்டமிட்டுள்ளன. அதன்படி, முதல் கட்டமாக பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் இதற்கான ஒத்திகைப் பயிற்சியில் சுகாதாரத் துறையினர் நாளை முதல் (டிச. 28 மற்றும் 29ம் தேதி) ஈடுபடவுள்ளனர்.

சீனா: சீனாவில் ஆறு நிறுவனங்களின் பரிசோதனை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஜனவரி 15ம் தேதிக்குள் இரண்டரை மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இம்மாத தொடக்கத்தில் தடுப்பூசி விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இப்போது உள்நாட்டு தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக்-5’ ரஷ்யாவில் உள்ள மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக  சேவையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இங்கிலாந்து: தடுப்பூசி அறிமுகப்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்தில், கடந்த 7ம் தேதி முதல் தடுப்பூசி விநியோகம் தொடங்கியது.
கனடா: கடந்த 14ம் தேதி முதல் ஃபைசரின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
அமெரிக்கா: அமெரிக்காவில் கடந்த 14ம் தேதி ஃபைசர்-பயோ என்டெக்கின் தயாரிப்பு கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கியது.

இஸ்ரேல்: கடந்த 20ம் தேதியன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, சுகாதார ஊழியர்கள் மற்றும் வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஒரு நாள் கழித்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயோன்டெக் - ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட்டது. 88  மில்லியன் மக்கள்தொகை கொண்ட இஸ்ரேலில், ஜனவரி இறுதிக்குள் 2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து: கடந்த 22ம் தேதி முதல் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  

முதல் கட்டத்தில், 75 வயதுடையவர்கள், சுகாதார மற்றும் அவசரகால ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 85 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் தற்போது ஒரு மில்லியன் அளவு மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
பஹ்ரைன்: அரபு நாடுகளில் முதன்முறையாக தடுப்பூசி போடும் பணியை தொடங்கிய பஹ்ரைன், கடந்த 23ம் தேதி தனது தடுப்பூசி விநியோகத்தை தொடங்கியது. ஃபைசர்-பயோனோடெக் தடுப்பூசி அங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தடுப்பூசி போடும் முன் ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையும் பஹ்ரைன் பயன்படுத்துகிறது.

3 லத்தீன் அமெரிக்க நாடுகள்: மெக்சிகோ, சிலி மற்றும் கோஸ்டாரிகா ஆகிய 3 லத்தின் அமெரிக்க நாடுகளும் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை தொடங்கின. இந்த மூன்று நாடுகளும் ஃபைசர் தடுப்பூசிகளைப் பயன்படுத்துகின்றன.
அர்ஜென்டினா: ரஷ்ய தயாரிப்பான மூன்று லட்சம் ‘ஸ்பூட்னிக்-5’ தடுப்பூசி அர்ஜென்டினாவுக்கு வந்துவிட்டது. வரும் ஒரு சில நாட்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
அயர்லாந்து: ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை வரும் புதன்கிழமை முதல் அயர்லாந்தில் போடப்படும்.
மொராக்கோ: சீனாவின் சினோபார்ம் மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஆகியன 6.5 மில்லியன் டோஸ் வந்துள்ளன. இங்கு விரைவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கும்.
பிரேசில்: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் தடுப்பூசி விநியோகம் இருக்காது என்று பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

* உலகம் முழுவதும் 8,01,94,033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இதுவரை  5,64,60,230 பேர் குணமடைந்துள்ளனர். 17 லட்சத்து 56 ஆயிரத்து 947 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : vaccine rehearsal starts ,Corona ,states ,countries ,Punjab ,Andhra Pradesh ,US ,Germany , Corona vaccine rehearsal begins tomorrow in 4 states, including Andhra Pradesh and Punjab: l Distribution begins in 11 countries
× RELATED கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான...