×

உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தரப்பட்ட நிதியில் சுற்றுலாத்துறையின் பல கோடி நிதி வீணடிப்பு: விதிமுறையை மீறி ரூ.8 கோடி வரை கூடுதலாக ஒதுக்கீடு; பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை,டிச.27: சுற்றுலாத்துறையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தரப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கி நிதி பல கோடி நிதி வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாக வெளியுள்ளது. மேலும், விதிமுறை மீறி ரூ.8 கோடி வரை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. சுற்றுலா தலங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், கடந்தாண்டு மார்ச் மாதம் ரூ.201 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ரூ.144 கோடி மட்டும் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கடனுதவி பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.57 கோடி தமிழக அரசு பங்கின் மூலம் நடக்கிறது.

இந்த நிதியை கொண்டு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஒகேனக்கல், திருச்சி, சிதம்பரம், ஆலங்குடி உள்ளிட்ட பல இடங்களில் 13 பேக்கேஜ் அடிப்படையில் சுற்றுலா உட்கட்டமைப்பு பணிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. ஆனாலும், டெண்டர் விட்டதில் குளறுபடி, பில் செட்டில் செய்வதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி மாதத்தில் 30 சதவீதம் மட்டுமே இப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் ஆசிய வளர்ச்சி வங்கி பணிகளை முடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனாவை காரணம் காட்டி இப்பணிகளை முடிக்க சுற்றுலாத்துறை அவகாசம் கேட்டதால், கடந்த செப்டம்பர் 27ம் தேதிக்குள் முடிக்க ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் இப்பணிகளை தொடங்கி, ஓராண்டுகள் கூட முடியாத நிலையில், கூடுதல் செலவு எனக்கூறி பல கோடி நிதி மீண்டும் சுற்றுலாத்துறையால் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது. குறிப்பாக, 18 மாவட்டங்களில் 98 இடங்களில் சூரிய ஒளி தெரு விளக்கு ரூ.34.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இப்பணிக்கு கூடுதலாக ரூ.5 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஓய்வு இல்லம் அமைக்க ரூ.23.08 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிக்கு ரூ.1.50 கோடியும், எழும்பூரில் அருங்காட்சியகம் பணிக்கு ரூ.10.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1.50 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

32 மாவட்டங்களில் 228 இடங்களில் வழிகாட்டி பலகை அமைக்கும் பணி முடிவடையாத நிலையில் விதிமுறை மீறி பணம் செட்டில் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று, டெண்டர் விடாமலேயே ரூ.70 லட்சம் செலவில் தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டன. 18 விமான நிலையங்களில் 30 சதவீமே பயணிகள் வந்த நிலையில் ரூ.4.50 கோடி செலவில் டெண்டர் விடப்பட்டதன் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி வீணடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் ஆதாரத்துடன் புகார் அளித்து இருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திட்ட கண்காணிப்பு பிரிவு பொது மேலாளர் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசு சார்பில், நிதி முறையாக செலவிடப்படாததால், சுற்றுலாத்துறையிடம் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* 18 மாவட்டங்களில் 98 இடங்களில் சூரிய  ஒளி தெரு விளக்கு அமைக்க ரூ.34.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இப்பணிக்கு கூடுதலாக ரூ.5 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 32 மாவட்டங்களில் 228 இடங்களில் வழிகாட்டி பலகை அமைக்கும் பணி முடிவடையாத நிலையில் விதிமுறை மீறி பணம் செட்டில் செய்யப்பட்டுள்ளது.

Tags : Multi-crore wastage of tourism funds in infrastructure development: up to Rs. Sensational information exposed
× RELATED தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில்...