×

நில மோசடி புகார் மீதான விசாரணை நடைமுறையில் மாற்றம்: ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது; பதிவுத்துறை ஐஜி சங்கர் தகவல்

சென்னை: பொதுமக்கள் அளிக்கும் நில மோசடி புகார் மீதான விசாரணை நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து மண்டல டிஐஜி, மாவட்டபபதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நில மோசடி, ஆள்மாறாட்ட ஆவண பதிவுகள் தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களில் பதிவுச்சட்ட பிரிவு 68(2)ன் கீழ் மோசடி, ஆள்மாறாட்ட பதிவுகள் தொடர்பாக விசாரணைகளை மாவட்ட பதிவாளர்கள் எந்த வித பாரபட்சமுமின்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட பதிவாளர்கள் 2 மாத காலத்திற்குள் விசாரணை முடித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். தக்க காரணங்களின்றி தாமதமாக ஆணை பிறப்பிக்கும் மாவட்ட பதிவாளர் மீது புகார் பெறப்பட்டால் அது கடுமையாக நோக்கப்படும்.நில மோசடி புகார்கள் தொடர்பாக பராமரிக்கப்பட்ட வேண்டிய பதிவேடு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தற்போது. இப்பதிவேடு தேவைக்கிணங்க திருத்தம் செய்து புதிய மாதிரி படிவ வடிவில் பரிந்துரை செய்யப்படுகிறது. இதில், முறைகேடுகள் ஏதேனும் கண்டறியப்படின் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாதம்,மாதம் சுருக்கமான குறிப்புகள் உடன் கோப்பு சீராக பராமரிக்கப்பட வேண்டும்.

2021 வருடம் ஆரம்பம் முதல் இந்த படிவ வடிவில் மாவட்ட பதிவாளர்களிடம் இருந்து ஒருங்கிணைந்த புள்ளி விவர அறிக்கையை தங்களின் புள்ளி விவரங்களுடன் துணை பதிவுத்துறை தலைவர்கள் மாதம், மாதம் 5ம் தேதிக்குள் இவ்வலுவகத்திற்கு அனுப்ப வேண்டும். அறிக்கை அனுப்புவதில் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். மேலும், இந்த பதிவேடுகளின் பதிவு தொடர்பான மண்டல வாரியான சீராய்வு பதிவுத்துறை தலைவரால் 3 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும். இந்த புதிய பதிவேடு ஜனவரி 1ம் தேதி முதல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : investigation , Change in the procedure of investigation on land fraud complaint: Effective January 1; Registry IG Shankar Information
× RELATED கர்நாடக பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்!