திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றியை உருவாக்கி மக்கள் மாற்றத்தை உருவாக்க தான் போகிறார்கள்: நல்லக்கண்ணு பிறந்தநாள் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ”திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வெற்றியை உருவாக்கி, தமிழ்நாட்டில் நிச்சயமாக மக்கள் மாற்றத்தை உருவாக்கத்தான் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தனது 96வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று நல்லக்கண்ணுவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த நாட்டில் இருக்கக்கூடிய இன்றையத் தலைவர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கக் கூடியவர் அய்யா நல்லகண்ணு. ஒருமுறை தலைவர் கலைஞர், நல்லகண்ணுவை பாராட்டிப் பேசுகிறபோது, ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். “என்னை விட வயதில் இளையவர் தான். ஆனால் தன்னுடைய தொண்டால், என்னைவிட மிக உயர்ந்தவராக இருக்கக் கூடியவர் நல்லகண்ணு” என்று மனதாரப் பாராட்டி இருக்கிறார். இந்த நேரத்தில் திமுக சார்பில் அதை நினைவுபடுத்தி, அவரை வணங்கி, வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே இந்த நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சிலர் அறிவித்து, அதற்கான முயற்சியில் ஈடுபடப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் இங்குப் பேசி, விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாகத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வெற்றியை உருவாக்கி, தமிழ்நாட்டில் நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கத்தான் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதற்கான பணிகளை, அதற்கான பிரசாரங்களை, பிரச்சார வியூகங்களை அமைத்து தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

அதில் ஒரு கட்டமாகத்தான், திமுக சார்பில் பிரசார வியூகங்களைப் பல்வேறு கோணங்களில் அமைத்து, அதில் ஒன்றாக கிராமசபைக் கூட்டங்களைத் தமிழகம் முழுவதும் நடத்திட வேண்டும் என்று முடிவு செய்தோம். கடந்த 23ம் தேதி தொடங்கித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டம் கூடுவது என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், கடைசிவரை இருந்து கேள்விகளைக் கேட்டு நம்மிடத்தில் பதிலை எதிர்நோக்கி, சிறு சலசலப்பு கூட இல்லாமல், ஒருவர் கூட எழுந்து செல்லாமல் அப்படியே கட்டுப்பாடாக இருந்து அந்தக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய காட்சிகளைப் பார்த்து நாம் பெருமைப்படுகிறோம், பூரிப்படைகிறோம்.

இதனைப் பார்த்து ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு கூட்டம் கூடுகிறது, இப்படி கட்டுப்பாடாக இருக்கிறார்களே, இத்தோடு நமது கழகம் முடிந்து விடும் எனும் அந்த ஆத்திரம், இன்றைக்கு அவர்கள் கண்ணை மூடி இருக்கிறது. அதனால்தான் கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று ஒரு அரசாணையை அதிமுக. அரசு பிறப்பித்தது. ‘கிராம சபை’ எனும்  பெயரைப் போட்டு நடத்தக்கூடாது என்று எந்த விதிமுறைகளும் கிடையாது. ஏற்கனவே ஊராட்சி சபைக் கூட்டத்தை நாம் நடத்தி இருக்கிறோம்.

இந்த அரசைப் பொறுத்தவரை, கிராமசபைக் கூட்டங்களை, அவர்கள் ஒழுங்காக நடத்திக் கொண்டிருந்தால், இதை நாம் நடத்த வேண்டிய தேவையே இல்லை. எனவே தான் இப்போது நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் நடத்துகிறோம். அரசு அதிகாரிகளை வைத்து நடத்தவில்லை. ஊராட்சித் தலைவர்களை வைத்துத் தீர்மானம் போட்டு, மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று நடத்தவில்லை. அப்படி நடத்தினால், அதை அவர்கள் தடுக்கலாம். கிராமசபைக் கூட்டம் என்ற பெயரை நாம் பயன்படுத்தக் கூடாதாம். அப்படி என்றால், எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்குப் போகும்போது, அவர் முதலமைச்சர் என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது. அதற்கு நீங்கள் தயாரா? என்ற கேள்வியை நான் திருப்பிக் கேட்க முடியும்.

ஆனால் நம்முடைய பணி நடக்க வேண்டும், பிரசாரம் நடக்க வேண்டும், அதற்கு எந்தத் தடையும் வந்து விடக்கூடாது. மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் தான், “துஷ்டனைக் கண்டால் தூர விலகி விட வேண்டும்” என்று சொல்வார்கள் அல்லவா, அதுபோலத்தான் நாமாக விலகிக் கொண்டு அந்தப் பெயரைக் கூட மாற்றி ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்‘ என்ற பெயரில் நடத்துவோம் என்று அறிவித்து, அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரவிருக்கக் கூடிய தேர்தல் என்பது, ஒரு மிகப்பெரிய மாற்றத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்கக்கூடிய வகையில் அது நிச்சயம் பயன்படப் போகிறது. அதற்கு நல்லகண்ணு நமக்கெல்லாம் வழிகாட்டியாக நிச்சயமாக இருக்கப் போகிறார். எனவே அவர் காட்டக்கூடிய அந்த வழியில் நின்று, நாம் நம்முடைய கடமை ஆற்ற உறுதிமொழி எடுக்கக்கூடிய நிகழ்ச்சியாக அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்வோம் இவ்வாறு அவர் பேசினார்.

* எளிமை, தியாகம், நேர்மையின் இலக்கணம் நல்லக்கண்ணு

மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,‘‘பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்; தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர். எளிமை-தியாகம்-நேர்மை இவற்றின் இலக்கணமாக அரசியல் கடலின் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டி வழிகாட்டும் பெருந்தோழர் அய்யா நல்லகண்ணு பிறந்தநாளில் நேரில் சந்தித்து திமுக சார்பில் வாழ்த்தி மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

* சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16ம் ஆண்டு! 2004 டிசம்பர் 26. சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம்!. உடைமை இழந்தோரின் உரிமை காப்போம். சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்!” என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories:

>