×

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் டிச.29-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு.!!!

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 31 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு உள்ள பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

31 நாட்களாக விவசாயிகள் ரயில்களை மறித்து போராடிவருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டும் வருகிறது. இதனால் ரயில்வே துறைக்கு ரூ.2400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்து தோல்வியடைந்ததால், தீர்வுக்கான முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இதுவரை மத்திய அரசு 5 முறை விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 29-ம் தேதி வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளது. டிசம்பம் 29-ம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஸ்வராஜ் இந்தியா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் தான் போராட்டத்தை கைவிடவுள்ளதாக விவசாயிகள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Tags : Central Government ,Associations , Ready to negotiate again with the Central Government on agricultural laws on December 29: Agricultural Associations Announcement. !!!
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...