திருநள்ளாறு சன்னீஸ்வரன் கோவில் சனிப்பெயர்ச்சி விழா நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு எதிராக வணிகர்கள் போராட்டம்

காரைக்கால்: திருநள்ளாறு சன்னீஸ்வரன் கோவில் சனிப்பெயர்ச்சி விழா கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டரை வருடங்களுக்கு பிறகு நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா நாளை அதிகாலை 5.22 மணிக்கு நடைபெறுகிறது. தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி இடம்பெயர்கிறார்.

சனிப்பெயர்ச்சி என்றாலே உலக புகழ்பெற்ற காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனிபகவான் கோவில் சிறப்பு பெற்றது. இந்த வருடம் சனிபகவான் கோவில் கொரோனா விதிமுறைகள் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக திருநள்ளாறு சனிபகவான் கோவில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் அதிரடியாக நேற்று உத்தரவு போட்டது. இந்த உத்தரவு தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதாவது புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழகம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருவார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. சனிக்கிழமையான இன்று பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இலவச தரிசனம், கட்டண தரிசனம் ஆகியவற்றிற்கு தனித்தனியாக பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை. காரைக்கால் மாவட்டத்தில் 7 இடங்களில் தடுப்புகள் அமைத்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வருபவர்களை மட்டும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று திருநள்ளாறு பகுதியில் உள்ள வணிகர்கள் இன்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>