×

மயிலாடுதுறை அருகே அரும்பூர் கிராமத்தில் இறந்தவர் உடலை வயல் மேட்டில் கொண்டு செல்லும் அவலம்: மயானத்துக்கு பாதை அமைக்க கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குளிச்சாரு ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் இறந்தவர் உடலை மயானத்திற்கு வயல்மேடு வழியாக எடுத்துச்  சென்றனர். ஆண்டாண்டு காலமாக இதே நிலை இருந்து வருவதால் மயானபாதை அமைத்து தர வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை அருகே குளிச்சாரு ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென்று தனி  இடுகாடு மற்றும் சுடுகாடு 1.கி,மீ தொலைவில் வயல்வெளிப்பகுதியில் அமைந்துள்ளது. கோடை காலத்தில் யாராவது இறந்துவிட்டால் வயல்வெளியில்  எந்த தடையும் இல்லாமல் இறந்தவர் உடலைகொண்டு சென்று அடக்கம் செய்து விடுகின்றனர்.

ஆனால் மழைகாலத்தில் இறந்தவர்களது உடலைகொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. நேற்றுமுன்தினம் அரும்பூர் கிழக்குத்தெருவில்  மாரியப்பன்(55) என்ற விவசாயி இயற்கை மரணம் எய்தினார். அவரது உடலை மயானத்திற்குக் கொண்டுசெல்லும் வழியில் அரும்பூர் வாய்க்கால்  ஒன்று மற்றும் நான்கு வயல்களை கடந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. மாரியப்பன் உடலை சுமந்துசென்ற ஊர் மக்கள் அரும்பூர் வாய்க்காலில்  இறங்கிச்சென்று அதையடுத்துள்ள வயல் வரப்பில் ஏறி இறங்கி மயானத்தை அடைந்தனர். மழைகாலத்தில் விவசாயம் மேற்கொண்ட வயல்  பகுதியில்தான் கொண்டுசெல்லவேண்டும்.

இதனைப் போக்குவதற்கு அரும்பூர் வாய்க்காலில் ஒரு பாலமும், மீதமுள்ள 300 மீ. தூரத்திற்கு  வயல்பகுதியில் உள்ள வரப்பில் மயான சாலை மற்றும் மயானகொட்டகை வசதி செய்து கொடுக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை  விடுத்தும் எந்த பலனும் இல்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி மயானபாதை அமைத்துத் தரவேண்டும் என்று அரும்பூர்  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : deceased ,village ,Arumbur ,Mayiladuthurai ,cemetery , Tragedy of transporting the body of the deceased in Arumbur village near Mayiladuthurai to the field mound: Request to pave the way for the cemetery
× RELATED பாணாவரம் அருகே விழிப்புணர்வு உடல்,...