×

சோதனைகளை நீக்கும் சோழவந்தான் சனீஸ்வரர்: நாளை சனிப்பெயர்ச்சி

நாளை (டிச.27) அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி தமிழகத்தின்  தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வர பகவான் உள்ளிட்ட தலங்களில் சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் நடைபெற உள்ளன.மதுரை மாவட்டம், சோழவந்தானில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயில் முக்கிய பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.  சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். இங்கு சனிப்பெயர்ச்சி விழா,  யாகசாலை பூஜை வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயில் துலாம், விருச்சிக ராசிக்கும், விசாக நட்சத்திரத்திற்கும் உாிய ஸ்தலமாக  விளங்குகிறது.

தனுசு டூ மகரம் நடப்பாண்டில் நாளை (டிச.27) அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு  பெயர்ச்சியாகிறார். இதற்காக இன்று  (டிச.26) யாகசாலை தொடங்கி 27ம் தேதி பரிகார பூஜைகள் நடைபெறும். அன்று அதிகாலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சியான பின் மஹா  அபிஷேகங்கள், 1008 நாம அர்ச்சனைகள் பின்னர் 12 ராசிக்காரர்களுக்கும் ஸங்கல்ப அர்ச்சனைகள் நடைபெறுகிறது. மிதுனம், கடகம், துலாம், தனுசு,  மகரம், கும்பம் ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் பரிகாரம் செய்து வழிபட வேண்டும். மற்ற ராசிக்காரர்களும் பொதுவான பரிகார பூஜைகள் செய்து  வழிபட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. தனிச்சன்னதியாய் அமைந்துள்ள  இக்கோயிலில், சனிதோறும் விரதமிருந்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நன்மையடையலாம் என்பது ஐதீகம்.

ஸ்தல வரலாறு பல ஆண்டுகளுக்கு முன் ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி சுவாமி முருகனுக்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். இங்குள்ள  ஆஞ்சநேயர் மற்றும் சித்தி விநாயகருக்கு பூஜைக்கு மலர்கள் பறிப்பதற்காக ஒரு நந்தவனம் இருந்தது. இங்கு பாரிஜாதம், நாகலிங்கம், மாவலிங்க  மரங்கள் வளர்க்கப்பட்டன. இந்த நந்தவனத்தில் தான் முருகனுக்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். ஒருநாள் இங்கு பூஜைக்காக மலர் பறித்துக்  கொண்டிருந்தவரின் காலடியில் வித்தியாசமான ஓசை கேட்டது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, காக்கை வாகனத்தில் நின்ற நிலையில்  சனீஸ்வரர் சிலை இருந்தது. விசாக நட்சத்திரத்தில் அவதரித்த முருகப்பெருமானுக்கு கோயில் கட்ட இருந்த இடத்தில், சுயம்புவாக சனீஸ்வரன் சிலை  கிடைத்ததால் அனைவரும் அதிர்ச்சியில் ஆ்ழ்ந்தனர்.

மேற்கு நோக்கி...இதையடுத்து முருகப்பெருமானுக்கு கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் அதே இடத்தில் சனீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பினர். கடந்த  1973, மே 23ம் தேதி காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் மூலம், இங்கு சுயம்பு சனீஸ்வர சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம்  நடைபெற்றது. பொதுவாக குச்சனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சனீஸ்வரர் கோயில்கள் கிழக்கு திசை நோக்கியே இருக்கும். ஆனால் இங்கு  மட்டும் தான் சனீஸ்வரர் கோயில் மேற்குப்பகுதியில் ஓடும் வைகையாற்றின் திசை நோக்கி அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் நந்தவனத்தில் இருந்தது  போல் இன்றும் மாவலிங்கமரம் இக்கோயிலில் உள்ளே உள்ளது. இதன் கீழ் தான் ஆலயம் உள்ளது.

வழிபாட்டு முறைகள் அறிவோமா?
* தாமரைப்பூ தண்டு திரியில் பசும் நெய்யில் தீபம் போடுதல்.
* சக்கரையில் தீபம் போடுதல்
* கருப்பு துணியில் எள்ளை சேர்த்து கட்டி நல்லெண்ணெயில் தீபம் போடுதல்.
* சுவாமிக்கு கருப்பு, நீலம் துணி சாற்றி எள் தீபம் ஏற்றுதல்.
* காகத்திற்கு உணவு வைத்து, காக உருவம் வாங்கி வைத்தல்.
* அபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் தானாமாக கொடுத்தல்.
* சனிதோறும் விரதமிருந்து சனிபகவான் ஸ்தோத்திரம் சொல்லுதல்.

மேலும் தான தர்மம் செய்தல், குலதெய்வம் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு, பெற்றோர், குரு ஆகியோரின் மனம் புண்படாமல் நடந்து கொள்ளுதல்,  மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தான தர்மம் செய்வது உள்ளிட்ட பொதுவான நடைமுறைகளை பின்பற்றுவதும் கூட சனீஸ்வரருக்கு உரிய  பரிகாரங்கள்தான். இதில் தாமரை மலர் பூ தண்டு திரியில் தீபம் ஏற்றினால் கணவன் - மனைவி ஒற்றுமை ஓங்கும். சர்க்கரையில் தீபம்  ஏற்றினால் எதிரிகளை வென்று தொழிலில் முன்னேற்றலாம் என்பது ஐதீகம்.

எப்படி செல்வது?
மதுரையிலிருந்து 24 கிமீ தூரமுள்ள சோழவந்தானுக்கு பஸ் மற்றும் ரயில் வசதி உண்டு. 27ம் தேதி சனிபெயர்ச்சியன்று பரிகார யாக பூஜையில்  கலந்து கொளள வேண்டிய ராசிக்காரர்கள் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். கொரோனா தடுப்பு  நடவடிக்கையாக  பக்தர்கள், சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகத்தினர் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.

Tags : Cholavanthan Saneeswarar ,trials ,Saturn ,shift , Deleting tests Cholavanthan Saneeswarar: Tomorrow
× RELATED சனி பிரதோஷ வழிபாடு