×

கொரோனாவுக்கு பின்னர் முழுவீச்சில் இயங்கும் தொழிற்கூடங்கள் பொங்கலுக்கு தயாராகும் பித்தளை பானைகள்: விலை உயரும் அபாயம்

நெல்லை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையை அடுத்த பேட்டை தொழிற்கூடங்களில் ஆயிரக்கணக்கில் பித்தளை பானைகள் தயாராகி  வருகின்றன. கொரோனாவுக்கு பின்னர் முழுவீச்சில் பானைகள் செய்யும் பணி சூடுபிடித்துள்ளதால், ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி  வருகின்றனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இன்னும் 20 தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலன்று பொங்கல் வைக்கவும், தலைப்பொங்கலுக்கு  சீர் செய்யவும் பொதுமக்கள் அதிகளவில் பித்தளை பானைகளை பயன்படுத்துவது உண்டு. பொங்கல்படிக்கு வழங்கப்படும் பண்ட பாத்திரங்களில்  பித்தளை பானைகள் முக்கிய பங்கு வகிக்கும். நெல்லை அருகே பழைய பேட்டை தொழிற்கூடங்களில் பொங்கல் பானைகள் உற்பத்தி ஆண்டுதோறும்  ஆயிரக்கணக்கில் நடப்பது வழக்கம்.

இவ்வாண்டும் பொங்கலுக்கு பித்தளை பானைகள், உருளிகள், போணி சட்டிகள் தற்போது இரவு பகலாக தயாராகி  வருகின்றன. பித்தளை ஷீட்களை, செம்பு, துத்தநாகம் சேர்த்து உருக்கி வைத்துள்ள தொழிலாளர்கள், கடந்த சில தினங்களை தேவைக்கேற்ப  பாத்திரங்களை வடிவமைத்து வருகின்றனர். இவ்வாண்டு பொங்கலுக்கான உருளி பானைகள் ஒரு கிலோ ரூ.600க்கு விற்பனை செய்யப்பட  உள்ளன.கடந்தாண்டு இப்பானைகள் 530 முதல் 550 வரை விற்பனையாகின. இரண்டரை கிலோ எடை ெகாண்ட பானைகள் ரூ.1500க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகின்றன. நெல்லையில் தயாரிக்கப்படும் பித்தளை பானைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மட்டுமின்றி, கேரளா,  மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்கின்றன. கொரோனா பாதிப்பு மற்றும் பித்தளை ஷீட்களின் விலை உயர்வு காரணமாக இவ்வாண்டு  பித்தளை பானைகளின் விலை ரூ.30 முதல் 60 வரை அதிகமாக வாய்ப்புள்ளதாக பித்தளை பானை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். தற்போது  பேட்டை பட்டறைகளில் பித்தளை குடம், குத்துபோனி, நாட்டு பானை என வகை, வகையாய் பித்தளை வகையறாக்கள் உருவாகி வருகின்றன.

இதுகுறித்து பித்தளை பானை தயாரிப்பு தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘நெல்லை சுற்றுவட்டாரத்தில் பேட்டை, தச்சநல்லூர், பழையபேட்டை, டவுன்  ஆகிய பகுதிகளில் 27 பட்டறைகள் உள்ளன. இவை அனைத்து கொரோனா பாதிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வரை மூடி கிடந்தன.  இவற்றில்  விற்பனை ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டி மட்டுமே சூடுபிடிக்கும். சாதாரண தினங்களில் ஒரு நாளைக்கு 10 பானைகள் தயாரித்தால்,  பொங்லையொட்டிய மாதங்களில் 25 பானைகள் வரை தயாரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இவ்வாண்டு சுமார் 15 ஆயிரம் பானைகள் பொங்கலுக்கு  தயார் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறை, கொரோனா பாதிப்பு காரணமாக 10 ஆயிரத்திற்கும் குறைவான பானைகளை  மட்டுமே தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு எங்கள் தொழிலுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்’’ என்றனர்.



Tags : factories ,Corona Brass , Full-fledged factories after Corona prepare brass pots for Pongal: risk of rising prices
× RELATED மறைமலைநகரில் மூட்டை மூட்டையாக...