×

லஞ்சம் வாங்கி கைதான ஆவின் அதிகாரியின் கர்நாடகா வீட்டில் விடிய விடிய சோதனை: தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

வேலூர்:  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சொரக்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன்(50). இவர் அங்குள்ள பால்பண்ணை கிடங்கில் பாலை ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்கான 1.91 லட்சம் தொகையை வழங்காமல் வேலூர் ஆவின் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது.  இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி மேலாளர் ரவியிடம், முருகையன் கேட்டபோது, ‘காசோலை வழங்க 50 ஆயிரம் தரவேண்டும்’ என கேட்டுள்ளார்.  இதனால் முருகையன், வேலூர் விஜிலென்ஸ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த 23ம் தேதி முருகையன் ரவியிடம் 50 ஆயிரத்தை கொடுத்தபோது, விஜிலென்ஸ் போலீசார் ரவியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘வேலூர் ஆவின் பொது மேலாளராக பணியாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி ஆவின் அலுவலகத்துக்கு பணியிட மாறுதலில் சென்ற கணேசாதான் பணத்தை வாங்க சொன்னார்’ என தெரிவித்தார்.

இதையடுத்து திருநெல்வேலியில் இருந்த கணேசாவையும்  வேலூருக்கு கடந்த 23ம் தேதி நள்ளிரவு அழைத்து வந்து விஜிலென்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து குடியாத்தம் கிளைச்சிறையில் நேற்றுமுன்தினம் மாலை அடைத்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஆவின் பொதுமேலாளருக்கு சொந்தமான வீடு கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில் உள்ளது. இந்த வீட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் நேற்று காலை வரை விடிய விடிய சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று போலீசார் சோதனை செய்தனர். இதில் ஆவணங்கள், தங்கம், வெள்ளி, பணம் விவரம் குறித்தும் கணக்கிட்டு ஆதாரங்களை திரட்டியுள்ளனர்.  மேலும் வீட்டில் இருந்தவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர சத்துவாச்சாரியில் தங்கி இருந்த வாடகை வீட்டிலும் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர்.



Tags : officer ,Tamil Nadu Anti-Bribery Police Action ,Avid ,Vidya Karnataka , Vidya raid on Avin officer's Karnataka home arrested for taking bribe: Tamil Nadu Anti-Corruption Police Action
× RELATED சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430...