லோன் ஆப் மூலம் கடன் வழங்கி மிரட்டல் சீனாவை சேர்ந்தவர் உட்பட 4 பேர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி

ஐதராபாத்: உடனடி லோன் ஆப் மூலம் வழங்கப்பட்ட கடனை வசூலிக்க வாடிக்கையாளர்களை அடாவடியாக மிரட்டியது தொடர்பாக சீனாவை சேர்ந்தவர் உட்பட 4 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.ஆன்லைனில் உடனடியாக கடன் வழங்க ஏராளமான மொபைல் ஆப்கள் வந்துவிட்டன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத ஆப்களில் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இதுபோன்ற ஒரு லோன் ஆப், வாடிக்கையாளர்களை மிரட்டுவதாக பல புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட ஆப்பின் கால் சென்டரில் விசாரணை நடத்தி, அங்கிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை நேற்று கைது செய்தனர்.

இவர்கள் உடனடி கடன் வழங்கும் 11 மொபைல் ஆப்களை உருவாக்கி, அதன் மூலம் தனிநபர்களுக்கு கடன் வழங்கி வந்துள்ளனர். கடன் தவணை கட்டத் தவறினால், எக்கச்சக்கமான வட்டி வசூலித்தல், வட்டி கட்ட முடியாதவர்களை போனில் மிரட்டுவது, போலியான வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது, கடன் பெற்றவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு நோட்டீஸ் விடுத்து மனரீதியாக நெருக்கடி ஏற்படுத்துவது போன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான 4 பேர் மீது 8 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய சீன நாட்டை சேர்ந்த மற்றொரு நபருக்கு வலை வீசி வருகின்றனர்.

Related Stories:

>