வங்கதேச எல்லை பாதுகாப்பு படை தகவல்: ஊடுருவல் நடக்கவில்லை போதை தான் கடத்தப்படுகிறது

கவுகாத்தி: ‘இந்தியாவுக்குள் யாரும் சட்ட விரோதமாக குடியேறுவதில்லை’ என வங்கதேச எல்லை பாதுகாப்பு படை கூறி உள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒவ்வொரு தேர்தலிலும் சட்டவிரோதமாக குடியேறிய  வங்கதேசத்தினர் விரட்டப்படுவார்கள் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி தருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர்கள் தலைமையில்  5 நாள் ஆலோசனை கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதில் நேற்று இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் அஸ்தானவும், வங்கதேச எல்லை பாதுகாப்பு படையின் தலைமை  இயக்குநர் முகமது ஷபீனுல் இஸ்லாமும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது இஸ்லாம் கூறுகையில், ‘‘வங்கதேசத்தின் ஜிடிபி நிலையான வளர்ச்சி கண்டுள்ளது. எனவே, வேலைக்காகவோ, வேறு பிற காரணங்களுக்காகவோ இந்தியாவுக்கு  செல்ல வேண்டிய அவசியம் வங்கதேச மக்களுக்கு இல்லை. மருத்துவ வசதிக்காக மட்டுமே முறையான ஆவணங்களுடன் செல்கின்றனர். எனவே, சட்டவிரோத குடியேற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், போதை பொருட்கள்,  கால்நடைகளை கடத்தல்  அதிகளவில் நடக்கிறது. கடந்த 3 ஆண்டில், எல்லையில் சட்டவிரோத குற்றங்களுக்காக 86 வங்கதேச நாட்டினர் இந்திய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Related Stories:

>