×

முகக்கவசம், சமூக இடைவெளியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: கொரோனா தொற்று பரவலையடுத்து முகக்கவசம், சமூக இடைவெளியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இயேசு பிரான் அவதரித்த நாளான நேற்று உலகம்  முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்பட்டது. ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு பிரார்த்தனையுடன் கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இந்த ஆண்டு கொரோனா தொற்று  பரவல் காரணமாக மத வழிபாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைந்த அளவில் பங்கேற்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முன் அனுமதி பெற வேண்டும் என்று பல்வேறு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை தவிர்க்கப்பட்டது. காலையில் நடைபெற்ற  கிறிஸ்துமஸ் ஆராதனையில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் வருகைக்கு ஏற்ப வழிபாடு கூட்டங்கள் தனித்தனியாக நடைபெற்றது. குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்கும் ஒருசில சிறிய ஆலயங்கள் மட்டுமே நள்ளிரவில் ஆராதனை நடந்தது. மற்ற ஆலயங்கள் அனைத்திலும்  அதிகாலையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு பிரார்த்தனையும், வழிபாடும் நடைபெற்றன. அனைவரும் முகக்கவசத்துடன்  ஆராதனையில் பங்கேற்றனர். உட்காருவதற்கு நாற்காலிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில்  போடப்பட்டிருந்தன.  கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பவர்கள் ஆலயத்தில் இருந்து வீடு திரும்பும் போது ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து சொல்வதும், கட்டித் தழுவுவதும் வாடிக்கை ஆனால் நேற்று அனைவரும் ஒருவருக்கொருவர்  வணக்கம் மற்றும் வாழ்த்துகளை மற்றும் பரிமாறிக் கொண்டனர். அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் ஆலயங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னையில் பிரபலமான சாந்தோம் தேவாலயத்தில் சென்னை-மயிலை உயர்  மறைமாவட்ட கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தில் பங்கு தந்தை வின்சென்ட் சின்னத்துரை தலைமையில் கிறிஸ்துமஸ் வழிபாடு நடைபெற்றது.  மவுன்ட் ஆலயம், சைதாப்பேட்டை சின்னமலை உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் எளிமையாக  கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றது.  சென்னை தென்னிந்திய திருச்சபை செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் பேராலயத்தில் தென்இந்திய திருச்சபை சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் நேற்று காலை கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு  நடந்தது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயம் கிறிஸ்துமஸ் விழாவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த பேராலயத்தின் அதிபர் தந்தை பிரபாகர் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. திறந்தவெளி மைதானத்தில் நடந்த  வழிபாடு, ஆராதனையில் வழக்கத்தை விட பாதி அளவில் மட்டுமே மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா  விதிமுறைகளை கடைபிடித்ததால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா புதிய அனுபவமாக இருந்தது. பட்டாசு, பரபரப்பு இல்லாமல் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.



Tags : celebration ,churches , Christmas celebration with mask, social space: special worship in churches
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்