ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையில் திடீர் அனுமதி

சென்னை: ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக சோர்வடைந்த நடிகர் ரஜினிகாந்த், திடீரென்று நேற்று ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘அண்ணாத்த’. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடிக்கின்றனர். ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின்  படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், படப்பிடிப்புகளுக்கு மீண்டும் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, கடந்த 14ம் தேதி முதல் ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வந்தது.  ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது படக்குழுவில் உள்ள 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவில் இருந்த  மற்றவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று திடீரென்று ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் ரஜினிகாந்த்  அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஜினிகாந்த் இன்று (நேற்று)  காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவருக்கு கடந்த 22ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று  உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் அவர் தனிமையில் இருக்கிறார். யாரையும் சந்திக்கவில்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாமல், கடுமையாக ஏறி  இறங்கி வருகிறது. மேற்கொண்டு பரிசோதனைகள் நடத்துவதற்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ரத்த அழுத்த அளவில் மாறுபாடு  மற்றும் உடல் சோர்வை தாண்டி அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவரது  இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று மாலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆவார் என்று கூறப்பட்டது. இதை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ‘ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க, சரியான அளவில் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அவரது  ஆரோக்கியம் நாளை (இன்று) எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து டிஸ்சார்ஜ் செய்வது பற்றி முடிவு செய்யப்படும். அவரைப் பார்க்க யாரும் வர வேண்டாம் என்று குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அவருடன் மகள் ஐஸ்வர்யா  இருக்கிறார். தெலங்கானா கவர்னர் மருத்துவர்களுடன் போனில் பேசி, ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார்’ என்று தெரிவித்துள்ளது.  ‘நண்பர் விரைவில் நலம்பெற வாழ்த்துகள்’ என்று நேற்று கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

ஐதராபாத் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் ரஜினியை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு  நாயுடு, ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட பலர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

Related Stories:

>