ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா: இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 40க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி...6,000 பேர் தீவிர கண்காணிப்பு.!!!

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 6,000 பேர் கண்காணிப்பு  வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 40க்கும் மேற்பட்டோருக்கு  தொற்று உறுதியானதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய  நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளில் பரவி  வருகிறது. இதன் எதிரொலியாக தீவிரமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பல நாடுகளின்  விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து  இங்கிலாந்துக்கு செல்லும் விமானங்கள் டிசம்பர் 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  மேலும், மத்திய சுகாதாரத் துறை உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் நவம்பர்  25 முதல் டிசம்பர் 23ம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த பயணிகள்  அடையாளம் காணப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தவும் கொரோனா சோதனைக்கு  உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு 4 விமானங்களில்  வந்த பயணிகளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்கள், எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 பேர்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களின் மாதிரிகள் தேசிய நோய்  கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு  நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை 2,724 பேர் வந்துள்ளனர். இவர்களில், 996 பேர்  தொடர் கண்காணிப்பிலும், 516 பேரின் மாதிரிகள் சோதனைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார  செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் டிசம்பர் 9 முதல் 23ம் தேதி வரை 2,116 பேர் இங்கிலாந்தில் இருந்து  வந்துள்ளனர். இவர்களில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து  1,609 பயணிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில்  டிசம்பர் 1 முதல் டிசம்பர் 22ம் தேதி வரை 2,127 பேர் இங்கிலாந்தில் இருந்து திரும்பி  உள்ளனர். 1,016 பேர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 6  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் 9 முதல் நேரடியாக அல்லது இங்கிலாந்து வழியாக  ஐதராபாத்திற்கு வந்த 1,200 பேரில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது. 846 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவை பொருத்தமட்டில் 68 பேர் இங்கிலாந்தில் இருந்து  திரும்பி உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய  சுகாதாரத்துறை வட்டார தகவலின்படி, இங்கிலாந்தில் இருந்து இந்தியா  திரும்பியவர்களில் நேற்றிரவு வரை 6,000 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள்  தொடர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 40க்கும்  மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானதால், அவர்களுக்கு  ஐரோப்பிய நாடுகளில்  உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதா? என்பது குறித்த  சோதனைகள் நடைெபற்று வருகின்றன.

Related Stories:

>