×

மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் பிரமாண்ட பேரணி: மம்தா அழைப்பு..திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்களிடையே பொய்களை பரப்புவது யார்? என்று, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 11 கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. கொல்கத்தாவில் எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பேரணிக்கு  மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடக்கவுள்ளதால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருகட்சிகளை சேர்ந்த  தொண்டர்களின் மீதான தாக்குதல், கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி - உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையிலான யுத்தமாக மேற்குவங்க தேர்தல் மாறியுள்ளதாக அரசியல்  விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறார். இந்த பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம்ஆத்மி உள்ளிட்ட 11 கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், காங்கிரசில்  ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரசில் சரத்பவார், திமுகவில் டி.ஆர்.பாலு மற்றும் பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஷ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கடந்த டிசம்பர் 11ம் தேதி நடைபெற்ற நாடு தழுவிய பாரத் பந்திற்கு ஆதரவாக மேற்கண்ட 11 கட்சிகள் அழைப்பு விடுத்தன. தற்போது இந்த கட்சிகள் தான் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளன. ஆனால், ஆம் ஆத்மி கட்சி கூட்டு  அறிக்கையில் கையெழுத்திடவில்லை. அந்த அறிக்கையில், ‘வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன் விவாதங்கள் அல்லது சரியான கருத்தாய்வு செய்யவில்லை. எம்பிக்கள் பலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்தோம். ஆனால், இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்த  எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடி பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். எங்களது தேர்தல் அறிக்கையில் விவசாய சீர்திருத்தங்கள் தேவை  என்று கூறியுள்ளோம்.

ஆனால், என்ன வகையான சீர்திருத்தங்கள்? இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இந்திய விவசாயத்தை வலுப்படுத்த எதிர்கட்சிகள் ஆதரவு தரும். ஆனால், தற்போதைய வேளாண்மை சட்டங்களால் விவசாயத்திற்கு நன்மையில்லை.  குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், எம்எஸ்பியை செயல்படுத்த இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. அதனால்,  மக்களிடையே பொய்களை பரப்புவது யார்? டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். அவர்களுக்கு எங்களின் ஆதரவு உண்டு.

எனவே புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாய சீர்திருத்தங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் அனைத்து பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். தேவைப்பட்டால், நாடாளுமன்றத்தின் சிறப்பு அல்லது  கூட்டு அமர்வை கூட்ட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : government ,parties ,Mamata ,DMK , Opposition rallies to condemn central government: Mamata Banerjee calls on parties including DMK
× RELATED இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய...