விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம், அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் திருத்துவோம் : ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி :விவசாய சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்ப்போம், அவை விவசாயிகளுக்குப் பலன் அளிக்காவிட்டால் அவற்றைத் திருத்துவோம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, தலைநகர் டெல்லி எல்லைகளில் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு, கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.பலமுறை விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் மீண்டும் மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் மத்திய அரசின் இந்த அழைப்பை விவசாயிகள் மீண்டும் நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய ராஜ்நாத் சிங், வேளாண் சட்டங்களை ஓராண்டுக்கு செயல்படுத்திப் பார்க்கும் யோசனையை முன் வைத்தார். மேலும் அவர் பேசியதாவது, அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும். விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை தொடரவே பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே, போராடும் விவசாயிகள், வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும். புதிய வேளாண் சட்டங்கள் வரும் ஆண்டுகளில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆதாயம் இல்லாவிடில், சட்டத் திருத்தம் செய்ய அரசு தயாராக உள்ளது, என்றார்.இது போன்ற ஒரு வேண்டுகோளை ராஜ்நாத் சிங் கடந்த இரண்டு நாள்களில் இரண்டாவது முறையாக விடுத்துள்ளார்.

Related Stories:

>