ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்: 3 நாளாவது தாக்குப்பிடிக்குமா புது கேப்டன் ரகானே அணி

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த பகலிரவு முதல் டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி  அடைந்தது. இந்நிலையில் 2வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் 2வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னுக்கு சுருண்டு படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே  கோஹ்லி, தனது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பியதால் ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். கோஹ்லி இல்லாத நிலையில் மற்ற வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்டில் சொதப்பிய பிரித்வி ஷா, மயங்க்  அகர்வால், விருத்திமான் சகா ஆகியோருக்கு கல்தா கொடுக்கப்பட்டு கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரிஷப் பன்ட் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. கே.எல்.ராகுல், சுப்மான்கில் தொடக்க வீரராக ஆடலாம். கோஹ்லி இடத்தில் ரகானே களம்  இறங்குகிறார். மேலும் விகாரிக்கு பதிலாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. பந்துவீச்சில், காயம் காரணமாக ஷமி விலகிய நிலையில் முகமது சிராஜ் அல்லது சைனி இடம் பெறலாம். முதல் டெஸ்ட்டில் அடைந்த  தோல்வியில் இருந்து மீண்டு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் வலுவான ஆஸி.க்கு எதிராக இந்தியா 3 நாட்கள் வரையாவது தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மறுபுறம் ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்டில் வென்ற உற்சாகத்தில் உள்ளது. அடிலெய்டில் முதல் இன்னிங்சில் இந்தியாவை விட குறைவாக ரன் எடுத்தபோதிலும், பந்துவீச்சில் இந்தியாவை 2வது இன்னிங்சில் எளிதாக சுருட்டி வீசி வென்றது.  தடுமாறி வந்த ஜோ பர்ன்ஸ் அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பி உள்ளார். லாபுசாக்னே, கேப்டன் டிம்பெய்ன் அரை சதம் அடித்தனர். ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என மிரட்டல் வேகப்பந்து வீச்சு உள்ளது. சுழலில் நாதன் லயன்  எப்போதும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் எந்த மாற்றமும் இல்லாமல் அதே அணியே களம் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்கி நடக்கிறது.  சோனி டென், சோனி சிக்ஸ் சேனல்களில் போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

100வது  டெஸ்ட்டில் மோதல்

இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோத இருப்பது 100வது டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன் மோதிய 99 போட்டியில், 28ல் இந்தியாவும், 43ல் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. ஒரு டெஸ்ட் டையில் முடிந்துள்ளது. 27 போட்டி டிரா  கண்டுள்ளது. அதிகபட்சமாக இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக 122, வெஸ்ட் இண்டீசுடன் 98, நியூசிலாந்து, பாகிஸ்தானுடன் தலா 59 டெஸ்ட்டில் மோதி உள்ளது.

மெல்போர்னில் இதுவரை...

* மெல்போர்னில் ஆஸ்திரேலியா இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளது. இதில் 64ல் வெற்றி, 31 ல் தோல்வி அடைந்துள்ளது. 17 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இங்கு 13 டெஸ்ட்டில் ஆடி 3ல் வெற்றி, 8ல் தோல்வி  கண்டுள்ளது. 2 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.

* இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இதுவரை 8 பாக்சிங் டே டெஸ்ட் நடந்துள்ளது. இதில் ஒன்றில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 5 போட்டியில் ஆஸி. வென்றுள்ளது. 2 டெஸ்ட் டிராவில் முடிந்திருக்கிறது. இங்கு கடந்த முறை (2018ம்  ஆண்டு) நடந்த பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாக்சிங் டே டெஸ்ட் என்றால் என்ன?

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கும் பழக்கம் உண்டு. ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த  நன்கொடையை போடுவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26ம் தேதி அன்று பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை, எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் நாளையே ‘பாக்சிங் டே’ என்று  அழைக்கிறார்கள்.

அந்த நாளில் தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. 1950ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. 1980ம் ஆண்டில் இருந்து  ஒவ்வொரு ஆண்டின் கடைசியிலும் மெல்போர்னில் ஏதாவது ஒரு அணியுடன் ‘பாக்சிங் டே டெஸ்ட்டில்’ ஆஸி. ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>