×

300 சவரன் நகை கொள்ளை வழக்கில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் கைது: தலைமறைவான 5 பேருக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் ஆசிஸ் (20). அதே பகுதியில் கீதாஞ்சலி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். இங்கு ராஜ்குமார் (50) என்பவர் ஊழியராக வேலை செய்கிறார். இங்கிருந்து நகைகள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. கடந்த 10ம் தேதி ஆசிஸ், ஊழியர் ராஜ்குமார் ஆகியோர் நகைகளை சப்ளை செய்ய ஆட்டோவில் புறப்பட்டனர். கடைசியாக ஸ்ரீபெரும்புதூருக்கு 300 சவரன் நகைகளுடன் சென்று கொண்டிருந்தனர். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, மாம்பாக்கம் அருகே சென்றபோது, 3 பைக்கில் வந்த 7 பேர், அவர்களை தாக்கி 300 சவரன் நகைகளை பறித்து சென்றனர்.

புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறிப்பு சம்பவம் நடப்பதற்கு முன், அவர்கள் வந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கூடுவாஞ்சேரி அருகே ஓட்டேரியை சேர்ந்த ராகுல் (20) என்பவரது உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரை பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்படி அவரது கூட்டாளி  செங்குன்றத்தை சேர்ந்த  பிரபல ரவுடி ரஞ்சித் (25) என்பவரை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். அதில், நகைக்கடையில் ஏற்கனவே வேலை செய்த சந்தோஷ் (26) என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வேலையிலிருந்து நின்றுவிட்டார்.

அந்த கடையில் இருந்து பல்வேறு பகுதிகளில் நகைகள் சப்ளை செய்வதை அறிந்திருந்தார். இதனால், அந்த நகைகளை கொள்ளையடிக்க முடிவு செய்தார். இதையடுத்து, திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக உள்ள ராமானுஜபுரத்தை சேர்ந்த தமிழ அரசன் (24) என்பவருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழரசனின் நண்பர் மானாம்பதி காவல் நிலையத்தில், சிறைச்சாலைக்கு கைதிகளை அழைத்து செல்லும் பாதுகாவலர் கதிரவனுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இதைதொடர்ந்து, வியாசர்பாடியை சேர்ந்த மாரிமுத்து (28), அதே நகைக்கடையில் வேலை செய்யும் சரவணன் (42) ஆகியோர் திட்டம் தீட்டினர். நகை எந்த நேரத்தில் எடுத்து செல்லப்படுகிறது என சரவணன் தகவல் கொடுப்பார்.

அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளையடிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 முறை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. கடைசியாக கடந்த 10ம் தேதி ராகுல், ரஞ்சித் உள்பட 7 பேர், ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று நகைகளை கொள்ளையடித்து, அதனை கோவையில் விற்பனை செய்தது தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி சந்தோஷ், மாரிமுத்து, தமிழரசன், கதிரவன், நகைக்கடை ஊழியர் சந்தவேலூரை சேர்ந்த சரவணன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நகை கொள்ளை சம்பவத்தில் ரஞ்சித், ராகுல் மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஈடுபட்டனர். ஆனால், இவர்களுடன் கைது செய்யப்பட்ட 5 பேர் ஈடுபட வில்லை. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

* எஸ்ஐ கனவு பறிபோனது
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மாரிமுத்து, சமீபத்தில் காவல்துறையில், எஸ்ஐ பதவிக்கான தேர்வு எழுதியுள்ளார். இவருக்கு காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது கனவு. ஆனால், நண்பர்களுடன் சேர்ந்து, வேலை செய்து சம்பாதிப்பதை விட, ஒரே நாளில் பணக்காரன் ஆகலாம் என நினைத்து, கம்பி எண்ணும் நிலைக்கு சென்றுவிட்டார்.

* கைதிகளுடன் தொடர்பு
மானாம்பதி காவல் நிலையத்தில் குற்றவாளிகளை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் பாதுகாப்பு காவலராக இருந்த கதிரவனுக்கு, பல்வேறு ரவுடிகளுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால், நகை கொள்ளையடிக்கும் திட்டத்தில், ஏற்கனவே பழக்கமான பிரபல ரவுடி ரஞ்சித்தை அவர் பயன்படுத்தியுள்ளார்.


Tags : policemen ,detectives , 7 arrested including 2 policemen in 300 shaving jewelery robbery case: Web for 5 undercover detectives
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...