சுய தொழில் தொடங்கும் மாணவர்களுக்கு மானிய கடன் வசதி: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: சுய தொழில் தொடங்கும் மாணவர்களுக்கு மானிய கடன் வழங்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா நடந்தது. டிஜிட்டல் முறையில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொண்டு 1003 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி அரசு சுயதொழில் தொடங்க விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்க தனிக்கொள்கை உருவாக்க உள்ளது.

எனவே ஒவ்வொரு மாணவரும் வேலை வழங்கும் நபராக உருவெடுக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கும் நபராக நீங்கள் மாறி, மக்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். அரசியலிலும் களம் இறங்க வேண்டும். ஏனெனில் மக்கள் இந்த விஷயத்தில் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். மேலும் அரசியல் நடவடிக்கையில் பங்கெடுப்பதை தவிர்த்து வருகிறார்கள். அதனால் ஜனநாயகம் பாதிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு குடிமகனும் அரசியலில் பங்கெடுக்க வேண்டும்.

இன்று பட்டம் பெறும் மாணவர்களில் இப்போது அல்லது இன்னும் சில மாதங்கள் கழித்து யார் தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், டெல்லி அரசு அந்த மாணவர்களுக்காக புதிய கொள்கை ஒன்றை உருவாக்கி, உதவி புரிய காத்திருக்கிறது. எனக்கு தெரியும், பல மாணவர்கள் தொழில் தொடங்கும் எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் மிகச்சிறந்த ஆலோசனைகள் உள்ளன.

ஆனால் எப்படி முதல்படியை எடுத்து வைப்பது என்பதுதான் அவர்களுக்கு தெரியவில்லை. யாரிடம் ஆலோசனை பெறுவது, நிதி ஆதாரத்தை திரட்டுவது எப்படி, வங்கி கடன் பெறுவது எப்படி என்றெல்லாம் அவர்களுக்கு தெரியவில்லை. அப்படிப்பட்ட மாணவர்களுக்காக ஒரு விரிவான தொடக்க கொள்ளை ஒன்றை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

இதன் மூலம் டெல்லி அரசிடம் இருந்து சட்டரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆலோசனை வழங்கப்படும். மேலும் மாணவர்கள் வங்கி கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தரப்படும். இந்த வங்கி கடன் மானியமாகவும் வழங்கப்படும். அதன் மூலம் மாணவர்கள் தங்கள் தொழில் தொடங்கும் முயற்சியை முன்னெடுக்கலாம். மாணவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உயர்கல்வி படிக்க விரும்பினால் அதற்கும் டெல்லி அரசில் திட்டங்கள் உள்ளன. நிதிப்பற்றாக்குறையால் படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு அரசு சார்பில் கடன் வசதி செய்து கொடுக்கப்படும்.

டெல்லி அரசு சார்பில் வட்டியில்லாமல் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கிறது. எனவே இந்திய மாணவர்கள் அந்த நாடுகளுக்கும் செல்ல வேண்டும். அங்கு ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்தியாவில் ஆராய்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. எனவே இன்று பட்டம் பெறும் மாணவர்கள் இந்தியாவில் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவார்கள் என்று நாம் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* டெல்லி அம்பேத்கார் பல்கலையில் 1003 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 21 சதவீதம் அதிகம் ஆகும். இதில் 445 மாணவர்கள் பட்டப்படிப்பும், 504 மாணவர்கள் முதுநிலையிலும், 51 மாணவர்கள் எம்பில் படிப்பும், 4 மாணவர்கள் பிஎச்டி பட்டமும் பெற்றனர்.

* பட்டம் பெற்ற 1003 பேரில் 65 சதவீதம் பேர் மாணவிகள். அனைவருக்கும் பட்டம் டிஜிட்டல் வழியாக வழங்கப்பட்டது.

Related Stories:

>