×

உயர் பாதுகாப்பு பதிவெண் பிளேட் குறித்த அனைத்து புகார்களையும் 4 நாளில் தீர்க்க வேண்டும்: அமைச்சர் கெலாட் உத்தரவு

புதுடெல்லி: வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு பதிவெண் பிளேட் (எச்எஸ்ஆர்பி) பொருத்துவது தொடர்பாக குவிந்துள்ள புகார்களை 4 நாட்களில் தீர்த்து வைக்க வேண்டும் என அது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் உத்தரவிட்டு உள்ளார். தீபாவளிக்கு பின் எச்எஸ்ஆர்பி பிளேட் உற்பத்தி இரட்டிப்பு ஆக்கப்படும் என தயாரிப்பாளர்கள் கூறியும், கெடு முடிவடைய உள்ளதால் தேவை அதைக்காட்டிலும் அதிகரித்து உள்ளது.

எச்எஸ்ஆர்பிக்கு பதிவு செய்ய சிரமப்பட வேண்டி உள்ளதாகவும், பதிவு செய்தாலும் கிடைப்பதற்கு நாள் கணக்கில் தாமதம் ஆகிறது என்றும், வீட்டில் வந்து பொருத்த உற்பத்தியாளர்கள் மறுப்பதாகவும் பல புகார்கள் வரிசை கட்டின.பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அமைச்சர் கெலாட் தலைமையில் போக்குவரத்து துறை, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்), எச்எஸ்ஆர்பி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு (எப்ஏடிஏ), ஒரிஜினல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ஓஇஎம்) ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்த பின் அமைச்சர் கெலாட் கூறியதாவது: புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் எச்எஸ்ஆர்பி குறித்த எல்லா புகார்களையும் எண் குறிப்பிட்டு பட்டியலாக்க வேண்டும். அடுத்த 3 அல்லது வேலை 4 நாட்களில் அந்த புகார் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. அதுபோல கொரோனா அச்சம் இன்னும் நீடிப்பதால், எச்எஸ்ஆர்பியை வீட்டிலேயே பொருத்தும் திட்டம் அறிவித்துள்ள உற்பத்தியாளர்களும், டீலர்களும், அதில் ஏன் தாமதம் செய்கிறார்கள் என விளங்கவில்லை. திட்டமிட்ட செயல் நடவடிக்கையில் இந்த பிரச்னை சரியாக வேண்டும்.

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு டெல்லியில் செயல்படும் வாகனங்களை எப்படி கையாளவது என்பது குறித்து எஸ்ஐஏஎம் ஒரு நல்ல பரிந்துரையை கூடிய விரைவில் வழங்க வேண்டும். வரும் 30ம் தேதி நடைபெறும் அடுத்த ஆலோசனைக்கு முன், எச்எஸ்ஆர்பி புகார்கள் அனைத்தும் தீர்வு கண்டிருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

எடுத்ததும் அபராதமா? அவகாசம் கொடுங்க...
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் மற்றும் வாகன எரிபொருள் ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரத்தில் எடுத்த உடன் அபராதம் விதிப்பதை தவிர்த்து மக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆம்ஆத்மி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் அனில்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், தல்வாந்த் சிங் ஆகியோர் கூறுகையில்,’ உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் விவகாரத்தில் டெல்லி அரசு மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை கிளப்ப வேண்டாம். இதை சிலர் தவறாக பயன்படுத்தக்கூடும். இதுதொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டதும் சரியில்லை’ என்று தெரிவித்தனர்.

ஆன்லைன் விண்ணப்ப முறை
ஆன்லைனில் மட்டுமே எச்எஸ்ஆர்பி பதிவு செய்ய முடியும் என்பதால், வாகன உரிமையாளர்கள் www.siam.in, wwwbookmyhsrpcom போன்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம் என்றும், புகார்களுக்கு hsrpquery@siam.in, grievance@boomyhsrp.com, homegrievance@bookmyhsrp.com போன்ற இணைய முகவரியிலும் தெரிவிக்கலாம் என்றும் அல்லது 1800 1200 201 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் ஆம் ஆத்மி அரசு அறிவுறுத்தி உள்ளது.

* இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் தவிர்த்து பிற அனைத்து வாகனங்களும் எச்எஸ்ஆர்பி பொருத்துவது, வாகன எரிபொருளை எளிதில் அறிந்து கொள்வதற்காக வண்ண ஸ்டிக்கர்களை ஒட்டுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
* தமிழகம் உள்பட சில மாநிலங்கள் இந்த நடவடிக்கையை இன்னும் தொடங்காத நிலையில் இந்த மாத இறுதிக்குள் டெல்லியில் உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் மற்றும் வாகன எரிபொருள் ஸ்டிக்கர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* இல்லை என்றால் தற்போது விதிக்கப்படும் ரூ.5,500 அபராதம் ரூ.10,000 ஆக உயர்த்தி வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது’.

Tags : Gelad , All complaints regarding High Security Registration Blade must be resolved within 4 days: Order of Minister Gelad
× RELATED பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்‍க...