தண்ணீர் டேங்கர் பிரச்னைக்கான பாஜ போராட்டத்தில் டிஜேபி தலைமை அலுவலகம் சூறையாடல்: 30 பேரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்

புதுடெல்லி: மாநில தலைவர் ஆதேஷ் குப்தா தலைமையில் பாஜவினரின் போரட்டம் நடைபெற்ற போது, வன்முறை தலைவிரித்தாடி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. வன்முறைக்கு பின் அலுவகம் போர்க்களமாக காட்சி அளித்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது.

புதுடெல்லி ஜந்தேவாலனில் டெல்லி குடிநீர் வாரிய (டிஜேபி) தலைமை அலுவலகம் உள்ளது. டிஜேபி துணை தலைவரும் ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான ராகவ் சத்தாவுக்கு அங்கு தனி அறை உள்ளது. டேங்கர் தண்ணீர் விநியோகம் செய்வதில் குளறுபடி என டிஜேபிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தலைவர் ஆதேஷ் குப்தா தலைமையில் பாஜ தலைவர்களும், தொண்டர்களும் அங்கு திரண்டு போராட்டம் நடத்தினர். பகல் 12.30 மணிக்கு திடீரென ஒரு கும்பல் டிஜேபி அலுவலகத்துக்குள் புகுந்தது. பிரதான வாயிலை உடைத்து முன்னேறிய கும்பல் அங்கிருந்த ஜெராக்ஸ் மெஷின், மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடி என அனைத்தையும் உருட்டு கட்டையாலும் இரும்புத்தடி கொண்டும் அடித்து நொறுக்கியது. அலுவலக கோப்புகள் தாறுமாறாக கிழித்து எறியப்பட்டன.

வெறிபிடித்த அந்த கும்பல் ராகவ் சத்தாவின் அறையை முற்றிலும் தரைமட்டமாக்கியது. பல நிமிடங்கள் நீடித்த அந்த வன்முறைக்குப் பின்னர்

அலுவலகம் முழுவதும் கண்ணாடி துண்டுகள், உடைந்த நாற்காலி, மேஜை என சிதறி போர்க்களமாக காட்சியளித்தது. இதுதொடர்பாக ராகவ் சத்தா கூறுகையில், ‘‘அத்துமீறி புகுந்த பாஜவினர், விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதையும், அவர்களை சந்திப்பதையும் கெஜ்ரிவால் நிறுத்த வேண்டும்.

தொடர்ந்தால், இதே தாக்குதல் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது அரங்கேறும் என பகிரங்கமாக மிரட்டினர். கொலைவெறி தாக்குதலில் அலுவலக ஊழியர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். அத்துமீறி புகுந்து வன்முறையில் பாஜவினர் ஈடுபட்டது அராஜகமானது. மேலும் அலுவலக ஊழியர்களையும் அவர்கள் மிரட்டி உள்ளனர்’’, என ஆவேசப்பட்டார். இந்த பிரச்னை தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கை குறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், ‘‘போராட்டம்  நடத்த பாஜவினர் அனுமதி கோரியிருந்தனர். அதன்படி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திடீரென கைகலப்பு, சச்சரவு எனத் தொடங்கி அதுவே அங்கு  பின்னர் கலவரமானது. இது தொடர்பாக 30 பேரை எங்களது பிடியில் வைத்துள்ளோம்.  அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. ஆம்  அத்மி கட்சியினரோ அல்லது பொது மக்களோ வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை தகவல்  கிடைக்கவில்லை’’, எனக் கூறியுள்ளனர்.

பாஜ மீது வீண் பழி சுமத்துகிறது ஆம் ஆத்மி. தண்ணீர் டேங்கர் விவகாரம் தொடர்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். எங்கிருந்தோ வந்த கும்பல் வன்முறையில் இறங்கினால் எங்களை அபாண்டமாக கூறுவதா என மாநில பாஜ தலைமை செய்தித்தொடர்பாளர் நவீன் குமார் கொந்தளித்தார். மற்றொரு செய்தித்தொடர்பாளர் வீரேந்திர பப்பர் கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டு வடிவமைத்து அரங்கேற்றிய வன்முறையாகும். பழியை பாஜ மீது சுமத்துகிறார்கள். மாநில தலைவர் ஆதேஷ் குப்தா உள்ளிட்ட பாஜவினர் 30 பேரை போலீசார் தங்களது கஸ்டடிக்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்’’, என பொரிந்து தள்ளினார்.

மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும்: கெஜ்ரிவால்

சம்பவம் கேள்விப்பட்டு அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்து முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘பகிரங்க மிரட்டல் விடுக்கும் அளவுக்கு துணிச்சலுடன் வன்முறையை கட்டவிழ்த்து உள்ளனர். இது போன்ற கோழைத்தன தாக்குதல், மிரட்டல்களுக்கு நானோ அல்லது ஆம் ஆத்மி கட்சியோ ஒருக்காலும் பணிய மாட்டோம். இறுதி மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்கு எங்கள் ஆதரவு தொடரும். பாஜவினரின் வன்முறையால் ஆம் ஆத்மி கட்சியினர் தூண்டப்படவோ, துவண்டு விடவோ கூடாது’’, என டிவிட் செய்துள்ளார்.

Related Stories:

>