47வது நினைவு நாள் பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை: கி.வீரமணி, வைகோ, திருமாவளவனும் அஞ்சலி

சென்னை: பெரியாரின் 47வது நினைவுநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியாரின் 47வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, இளைய அருணா, சிற்றரசு, எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் மதன் மோகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ராஜா அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தனது முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள் (இன்று) சமூக அடிமைத்தனம் தொடரும் வரை - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார். அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மலர்வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தினார். அப்போது மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் கழக குமார், ஜீவன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அண்ணா சாலையில் பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், காஞ்சி பார்வேந்தன், மாவட்ட செயலாளர் இரா.செல்வம், செல்லதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல பல்வேறு கட்சி தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>