×

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு: காலை 6 மணி முதல் டிக்கெட் பெற்று தரிசிக்கலாம்: இலவச தரிசன டிக்கெட் ஒருமணி நேரத்தில் முடிந்தது

சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதற்காக, இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் கட்டண தரிசன  டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. டிசம்பர் 25ம் தேதி (இன்று) ராபத்து உற்சவம் தொடங்குகிறது. அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்தாண்டு சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இலவச, கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில், கடந்த 22ம் தேதி முதல் இணையதளம் மூலம் இலவச தரிசன டிக்கெட் பெறுவதற்கு புக்கிங் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 22ம் தேதி காலை 10 மணியளவில் இலவச தரிசன டிக்கெட் பதிவுக்கு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் புக்கிங் செய்யப்பட்டு விட்டன.

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் கட்டண தரிசனத்துக்கு புக்கிங் செய்து வரிசையில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று  காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை இலவச முன்பதிவு செய்த 3000 பேர் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வரிசையில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். மேற்கு கோபுர வாசல் வழியாக காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை தெற்கு மாடவீதி வழியாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில் ₹100 கட்டண டிக்கெட் பெற்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோயில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில், பரமபத வாசல் மட்டும் தரிசனம் செய்ய காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயிலின் உட்பகுதியில் அதிகாலை நடைபெறும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியினை பக்தர்கள் காண்பதற்காக எல்இடி தொலைக்காட்சி கோயிலின் நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கூடுதலாக இலவச கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  கோயிலின் உள்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மாட வீதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோயிலின் உட்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கண்காணிக்க 32 இடங்களில் அமைக்கப்பட்டு, கோயிலின் உட்பகுதியிலும், காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Heaven's Gate ,occasion ,Thiruvallikkeni Parthasarathy Temple ,Vaikunda Ekadasi ,Free Darshan , Gate of Heaven Opening Today at Thiruvallikkeni Parthasarathy Temple on the occasion of Vaikunda Ekadasi: Tickets can be purchased from 6 am: Free Darshan tickets completed in one hour
× RELATED திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ...