பொதுமக்கள், எதிர்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக குப்பை கொட்டும் கட்டணம் வசூலிப்பது வாபஸ்: 2 நாளில் பின்வாங்கிய சென்னை மாநகராட்சி

சென்னை: பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக சென்னையில் குப்பை கொட்டும் கட்டணம் வசூல் செய்வதை சென்னை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 4 மண்டலங்களை தனியாருக்கு அளிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு பல்வேறு பணிகள் நடந்தாலும் சென்னையில் குப்பை மேலாண்மை முறையாக செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பெரும்பாலும் சேகரிக்கப்படும் குப்பையை அறிவியல் பூர்வமாக மறுசுழற்சி செய்யாமல் அப்படியே குப்பை கிடங்குகளில் கொட்டி வந்தனர். மேலும், குப்பையை முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும், கிடங்குகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், 2021 ஜனவரி 1ம் தேதி முதல் சென்னையில் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதில், குப்பை கொட்டுபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவும், விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு 10 முதல் 100 வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. வணிக நிறுவனங்களுக்கு 1000 முதல் 5 ஆயிரம் வரையும், நட்சத்திர விடுதிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 300 முதல் 3 ஆயிரம் வரையும், தியேட்டர்களுக்கு 750 முதல் 2 ஆயிரம் வரையும், அரசு அலுவலகங்களுக்கு 300 முதல் 3000 வரையிலும், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகளுக்கு 500 முதல் 1000 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.  பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ேஹாம்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலும், தனியார் பள்ளிகளுக்கு 500 முதல் 3000 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குப்பையை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு 500, தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு 500 முதல் 5000, கட்டுமான கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் 2000 முதல் 5000, குப்பை எரித்தால் 500 முதல் 2000 அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோன்று, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், இதை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, சென்னை மாநகராட்சி இந்த விதிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அதில், குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் நடைமுறை காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.  கடந்த செவ்வாய்க்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்ட போது அனைத்து தரப்பினர் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் 2 நாளில் அந்த விதிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2006ன்படி சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 இயற்றப்பட்டு இதை செயல்படுத்த அரசின் அனுமதி பெற்று மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட விதிகளில் கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான கட்டணத்தை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இந்த அடிப்படையில் சொத்து வரிகளுடன் சேர்ந்து இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது, கொரோனா  காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு குடியிருப்போர் நல சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதலமைச்சர் அறிவுறுத்தல்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?’

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மின்வாரிய பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்து போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி. குப்பை  கொட்டவும் வரி என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், திமுக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?. ‘எண்ணித்துணிக கருமம்’ என அ.தி.மு.க. அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>