×

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு 28ம் தேதி வருகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறது என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: டிசம்பர் 3ம் தேதி முதல் புரெவி புயல் தாக்கத்தினால்,  திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது.  அதனால்,  சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிரும் மற்றும் இதர வேளாண் பயிர்களும், வாழை, வெங்காயம், மிளகாய் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும் ஏறத்தாழ 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டன. கடந்த 8ம் தேதி மற்றும் 9ம் தேதி ஆகிய நாட்களில், கடலூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர், வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களின் கணக்கெடுப்பு பணியினை விரைந்து மேற்கொள்ளுமாறு கள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

அதன்படி, 33 சதவீதத்துக்கு மேல் சேதமடைந்த பயிர்கள் மற்றும் விவசாயிகளின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.  பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர், பட்டா, சர்வே எண், வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் விவரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது. சரியான பயிர் சேத விவரங்கள் மற்றும் விவசாயிகளின் விவரங்களை கணக்கீடு செய்ய,  அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, நெற்பயிர்களை பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்களில் வெள்ளநீர் முழுமையாக வடிந்த பிறகு, பயிர் சேத விவரங்களை முழுமையாகக் கணக்கிட்டு, சரிபார்க்க அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பயிர்ச்சேத விவரங்களுடன் அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது போல்,  புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு 28ம் தேதியன்று வருகைதரவுள்ளது.  இந்த ஆய்வு முடிந்தபின், பாதிப்படைந்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும். அதன் அடிப்படையில் விரைவாக அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Central Committee ,areas ,storm ,Burivi ,Announcement ,Government of Tamil Nadu , Central Committee to inspect areas affected by Burivi storm on 28th: Government of Tamil Nadu Announcement
× RELATED சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!