விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதியிடம் 2 கோடி கையெழுத்து: டெல்லியில் பேரணி நடத்திய ராகுல், பிரியங்கா கைது

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 2 கோடி விவசாயிகளிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி நேற்று வழங்கினார். மேலும், விவசாயிகளை ஆதரித்து பேரணி நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்பி.க்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.  வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு மறுத்துவிட்டதால், விவசாயிகள் நேற்றும் 29வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி  விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று பேரணி நடத்தப்பட்டது.

டெல்லியில் நடந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்பி.க்கள் பங்கேற்றனர்.  அவர்கள் விஜய் சதுக்கத்தில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பேரணியாக செல்ல முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.   பின்னர், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த ராகுல் காந்தி, 2 கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதத்தை கொடுத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது: ஜனாதிபதியிடம் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தினோம். இந்த சட்டங்களால் விவசாயிகள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு சாதகமானது என்று அரசு மட்டுமே கூறி வருகிறது. ஆனால், இவற்றை விவசாயிகளுக்கு எதிரானதாக தான் நாடு பார்க்கின்றது. இந்த சட்டங்கள் அரசினால் திரும்ப பெறப்படும் வரை, டெல்லி எல்லையை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் திரும்பி போக மாட்டார்கள். அரசு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாய அமைப்பை அரசு அழிக்க நினைத்தால், பேரழிவு ஏற்படும்.  விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் செவி சாய்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளன. பிரதமர் மோடியின் அதிகாரத்தை பறிக்கும் எந்தவொரு நடவடிக்கையும், தேச விரோதமாக, தீவிரவாத நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மக்களின் சொத்துகளை அவரது முதலாளித்துவ நண்பர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறார். அவருக்கு நெருங்கிய அந்த நால்வருக்காக, மக்கள் அனைவரையும் தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்று கூட அவர் அழைப்பார். காங்கிரஸ் எம்பி.க்கள், அவர்களின் அலுவலகத்தில் இருந்து வெளியேற விடாமல் அரசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிரதமர் மோடி ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நாட்டில் உண்மையான ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய்விட்டது. கற்பனையில் மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசுக்கு என்ன பிரச்னை?

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், பிரதமர் மோடி அரசுக்கு எதிரான எந்தவொரு அதிருப்தி குரலும், தீவிரவாதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தான் இந்த பேரணி நடத்தப்பட்டது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி.க்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு உரிமை உள்ளது. அதில் அரசுக்கு என்ன பிரச்னை? டெல்லியில் முற்றுகையிட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்க அரசு தயாராக இல்லை,’’ என்றார்.

Related Stories:

>