×

ராமநாதபுரம் ஜிஹெச்சில் கொரோனா பரிசோதனைக்கு வசூல்: தொல்லை கொடுக்கும் ஏஜென்டுகள்

கீழக்கரை: கொரோனா பரிசோதனை பெயரில் ஏஜென்டுகள் பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் 100 பேருக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இங்கு கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பரிசோதனைக்காக ராமநாதபுரம் வருகை தருகின்றனர். கீழக்கரையில் பரிசோதனை மையம் இருந்தாலும் ராமநாதபுரம் சென்றால் மறு நாளே பரிசோதனை முடிவுகள் கிடைத்து விடும் என்ற அடிப்படையில் அதிகமானோர் ராமநாதபுரம் செல்கின்றனர்.

இதனை பயன்படுத்தி ஏஜென்டுகள் சிலர் நபர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்து கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக வாங்கித் தருவதாக கூறி அழைத்து செல்கின்றனர். இவர்கள் மொத்தமாக முன்பதிவு டோக்கன்களை பெற்று வைத்துக் கொள்கின்றனர். இதனால் ஏஜெண்டுகளை தவிர்த்து செல்லும் பொதுமக்களுக்கு முன்பதிவு டோக்கன்கள் கிடைப்பது அரிதாகி விடுகிறது. எனவே பரிசோதனைக்கு செல்பவர்கள் ஏஜெண்டுகளை நாடும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அரசு இலவசமாக தரும் கொரோனா பரிசோதனையை பணத்துக்கு ஆசைப்படும் ஏஜென்ட்களால் ஏழை மக்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள்.

கீழக்கரை செய்யது இபுராகிம் கூறுகையில், ‘‘கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாடகை வாகனங்களில் மொத்தமாக பரிசோதனைக்குச் செல்பவர்களை ஏஜென்டுகள் அழைத்து செல்கிறார்கள். நபர் ஒருவருக்கு ரூ.1000 வசூல் செய்கிறார்கள். இதனால் பணம் இல்லாதவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து வட்டார அரசு மருத்துவரிடம் புகார் தெரிவித்தும், அவர் கண்டு கொள்ளவில்லை. எனவே அந்தந்த நபர்களின் குடும்பத்தினரோ அல்லது சம்பந்தப்பட்டவர் நேரில் சென்றால் மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும். ஏஜென்டுகளுக்கு முன்பதிவு டோக்கன் வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழக்கரை பகுதியில் வெளிநாடு செல்பவர்கள் அதிகளவில் உள்ளதால் அவர்களின் அவசரத்தை பயன்படுத்தி இந்த வசூல் நடைபெறுகிறது. இந்த சிரமத்தை தவிர்க்க பாஸ்போர்ட் எண் அல்லது ஆதார் எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் முன்பதிவு டோக்கன்களை கொடுத்தால், இந்த ஏஜென்டுகள் தலையீட்டை தவிர்க்க முடியும்’’ என்றார்.



Tags : corona test ,agents , Collection for corona test at Ramanathapuram GH: harassing agents
× RELATED திருவள்ளூர் சட்டமன்ற...