×

பக்தர்கள் இன்றி முதன்முறையாக ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: 108 வைணவத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புரிக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறும். இந்தாண்டு விழா  கடந்த 14ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. மறுநாள் பகல்பத்து உற்சவம் துவங்கியது. இதன் நிறைவு நாளான இன்று (24ம் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்ற ஆசைகளை துறக்க வேண்டும். ஆசைகளில் ெகாடூரமான ஆசை பெண்ணாசை. எனவே, பெண்ணாசையை துறந்தவர்கள்தான் மோட்சத்தை  அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்பெருமாள் இன்று காலை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு எனும் பரமபதவாசல் திறப்பு நாளை (25ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு நடக்கிறது. கொரோனா காரணமாக கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் சொர்க்கவாசல் திறப்பை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சொர்க்கவாசலை கடந்து  மண்டபத்திற்கு வந்த பின்பு காலை 8 மணிக்கே முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் இந்த முறை  நம்பெருமாள் பக்தர்கள் கூட்டமின்றி சொர்க்கவாசலை கடக்க உள்ளார்.

4 மணிக்கு நடை மூடல்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாள் மாலையிலேயே பக்தர்கள் கோயிலில் குவிவார்கள். இவர்கள் பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து வந்து தரிசனம் செய்வார்கள். இதனால் கூட்டம்  அதிகளவில் இருக்கும். தற்போது கொரோனா காரணமாக இந்தாண்டு இந்த தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (24ம் தேதி) மாலை 4 மணியுடன் கோயில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள்  மட்டும் நாளை (25ம் தேதி) காலை 8 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி (நாளை) 25ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு மார்கழி மாத திருப்பாவை சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட உள்ளது. பின்னர் அர்ச்சனை செய்யப்பட்டு  அதிகாலை 4.30 மணிக்கு ஏழுமலையான் கோயிலில் உள்ள சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல், ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட உள்ளது.

அதன்பிறகு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு 9 மணிக்கு மேல் ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்களும், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை முதல் இரவு வரை 36,055 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.3.17 கோடி காணிக்கையாக கிடைத்தது.


Tags : gates ,devotees ,Srirangam ,time , The gates of heaven will open tomorrow in Srirangam for the first time without devotees
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி