×

பேஸ்புக், மெசஞ்சரில் பெண் குரலில் பேசி ரூ.36 லட்சம் மோசடி: சென்னையில் கைவரிசை காட்டிய நைஜீரிய வாலிபர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப்(48). இவர், ராயல் டிரேடிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் தொழில்தொடர்பான தகவல்களை பதிவு செய்து வந்தார். அந்த பதிவுகளை பார்த்த லண்டனை  சேர்ந்த எலிசபெத் என்ற பெண் மெசஞ்சர் மூலம் தொழிலதிபர் ஜோசப்பை தொடர்பு கொண்டு தன் மீது நம்பிக்கை வரும்படி பேசியுள்ளார். அப்போது அவர், ‘’மும்பையில் ரத்த புற்றுநோய் குணப்படுத்தும் போலிக் ஆயில்’ கிடைப்பதாகவும் அந்த  ஆயிலை நீங்கள் எனக்கு வாங்கி அனுப்பினால் நான் பணத்தை கொடுக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய தொழிலதிபர் போலிக் ஆயில் வாங்கி அனுப்புவதாக உறுதி அளித்து உள்ளார். ஒரு வாரத்துக்குள் ரூ.36 லட்சம் மதிப்புள்ள ஆயிலை வாங்கி அனுப்பினால் ரூ.42 லட்சம் தருவதாக கூறியுள்ளார். 6 லட்சத்திற்கு ஆசைப்பட்டு  தொழிலதிபர் ஒவ்வொரு வாரமும் ஆயிலை வாங்கி அனுப்புகிறேன்  என்று கூறியுள்ளார். எலிசபெத் கூறியபடி மும்பையில் உள்ள சுனிதா என்ற  பெண்ணிடம் பேசி உடனடியாக வாங்கி அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்படி தொழிலதிபர் மெசஞ்சர் மூலம் மும்பையில் உள்ள சுனிதாவிடம் பேசியுள்ளார். அப்போது சுனிதா தனது வங்கி கணக்கில் ரூ.36 லட்சம் பணம் செலுத்தினால் உங்களுக்கு ‘போலிக் ஆயில்’ உடனடியாக அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து தொழிலதிபர், சுனிதாவின் வங்கி கணக்கில் ரூ.36 லட்சத்தை செலுத்தியுள்ளார். அத்துடன் பணம் அனுப்பியது குறித்து  தகவல் தெரிவிக்க தொழிலதிபர் சுனிதா மற்றும் லண்டனில் உள்ள எலிசபெத்தை தொடர்பு கொண்ட போது  அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர், இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வங்கி கணக்கு எண்ணை  வைத்து விசாரணை நடத்தியபோது மும்பையில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை சென்று அம்மாநில போலீசாரின் உதவியுடன் நைஜீரியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் வில்மர் என்பவரை கைது செய்தனர். இவர்தான் பெண் குரலில் பேசி மோசடி செய்திருப்பது தெரிந்தது.  இதுபோல் நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. சென்னையில் மட்டும் 4 பேரிடம் பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நைஜீரியா வாலிபர் கிறிஸ்டோபர் வில்மரை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Nigerian ,Messenger , Nigerian youth arrested in Chennai for swindling Rs 36 lakh by speaking in female voice on Facebook and Messenger
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...