×

முக்கூடலில் முறையாக செயல்படாத பீடித்தொழிலாளர் மருத்துவமனை: 5 ஆண்டுகளாக தொடரும் அவலம்

பாப்பாக்குடி: முக்கூடலில் அமைக்கப்பட்ட பீடித் தொழிலாளர் மருத்துவமனை கடந்த 5 ஆண்டுகளாக முறையாக செயல்படாததால் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரமாக விவசாயத் தொழிலுக்கு அடுத்து பீடித் தொழில்தான் உள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்தத் தொழிலில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். பீடி சுற்றும் தொழிலாளர்கள் வாரம் ஒன்றிற்கு அதிக பட்சம் ரூ.1000 மட்டுமே ஊதியம் பெற இயலும்.

பீடி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டால் தொழிலாளர்கள் நிலை வறுமைக் கோட்டிற்கும் கீழ்தான் உள்ளது. உடல்வலி, கழுத்து வலி, காச நோய் மற்றும் புற்று நோயால் பீடித் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாற்றுத் தொழில் இல்லை என்பதால் தங்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து அறியாமலேயே பலர் மரணித்து வருவதும் அன்றாடம் நடக்கும் விஷயமாகி விட்டது. இவ்வாறு அவதியுறும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிக்சை எடுத்துக் கொள்ள முடியாது. ஆங்காங்கே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதும் கிடையாது. இந்நிலையில்தான் பீடித் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரின் மருத்துவ பராமரிப்பு தேவைகளுக்காக தொழிலாளர் நல அமைப்பின் மூலம் முக்கூடலில் கடந்த 2005ல் 8.30 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.20 கோடி மதிப்பில் 120 அறைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது பீடித் தொழிலாளர் நல மருத்துவமனை. திறந்து வைக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகள் நாள்தோறும் சுமார் 500 வெளிநோயாளிகள் வந்து சென்று பயனடைந்தனர். எக்ஸ்ரே, இசிஜி, ஆய்வகம் உள்ளிட்டவைகளும் செயல்பட்டு வந்தன.

மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் பணி இடம் மாறுதல் பெற்றுச் சென்ற பின்னர் போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் மருத்துவர்கள் உள்ளிட்ட பணி இடங்கள் காலியாக இருந்தது. வந்து செல்லும் ஓரிரு மருத்துவர்களால் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கவனிக்க இயலாததால் படிப்படியாக நோயாளிகள் இங்கு வருவது குறைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இம்மருத்துவமனை தற்போது சாதாரண மருந்தகமாக மாறி விட்டது. வரும் நோயாளிகளுக்கு ஓரிரு மாத்திரைகளை மட்டுமே கொடுத்து அனுப்பி விடுகின்றனர் மருத்துவர்கள். 120 அறைகளுடன் கூடிய பிரம்மாண்டமான மருத்துவமனையில் தற்போது பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் இடமாக மாறி விட்டது. மருத்துவமனையும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு பாழடைந்த கட்டிடமாக மாறி விட்டது. உபகரணங்கள் அனைத்தும் பயன் பாட்டுக்கு லாயக்கற்றதாகி விட்டது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் செல்லரித்துப் போய்விட்டது.

இந்த மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாககக் கூட மாற்றி பயன்படுத்த முடியும் என்ற நிலையில் மக்கள் வரிப்பணம் வீணாக கிடப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே இந்த மருத்துவமனையை சீரமைத்து மக்கள் பயன் பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பீடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கையாகும்.

Tags : hospital ,trio , Hospital
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...