×

நாகர்கோவிலில் 2 அம்மன் கோயில்களில் உண்டியல் திருட்டு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 2 அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் நேற்று முன்தினம் இரண்டு கோயில்களில் திருட்டு நடந்துள்ளது.

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் தேவி முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் ஈத்தாமொழி ஜங்சனில் இருந்து பீச்ரோடு செல்லும் வழியில் சாலையோரம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கோயில் முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளார். நேற்று காலை கோயிலுக்கு வந்தவர்கள் கோயில் உண்டியல் திருட்டு நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வைத்தியநாதபுரம் ஊர் தலைவர் விஜயகுமார் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

புகாரில் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பதாக கூறியிருந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கோயிலில் கடந்த சில வருடத்திற்கு முன்பு இதேபோன்று உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபோல் கோட்டார் வடலிவிளையில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றுள்ளார். நள்ளிரவு மர்ம நபர் முத்தாரம்மன் கோயில் முன்பு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றுள்ளார். நேற்று காலை பஜனை பாடுவதற்கு பொதுமக்கள் கோயிலுக்கு வந்துள்ளனர்.

அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வடலிவிளை ஊர் தலைவர் ராஜகுமார் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் உண்டியலில் இருந்த ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இருகோயில்களில் நடந்த திருட்டு தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வைத்தியநாதபுரம் தேவி முத்தாரம்மன் கோயிலில் கண்காணிப்பு கேமரா உள்ளது. இந்த கேமராவில் உண்டியலில் திருடும் திருடனின் படம் பதிவாகியுள்ளது.

ஒரு வாலிபர் சாலையில் நடந்து வந்து கோயில் கேட்டை தள்ளுகிறார். அவரால் தள்ளமுடியவில்லை. பின்னர் காம்பவுண்ட் சுவரில் ஏறி குறித்து உள்ளே வரும் அந்த வாலிபர் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்செல்கிறார். அவர் கையில் கையுறை அணிந்துள்ளார். மேலும் முகத்தை துணியால் மூடி இருந்தார். கோயிலில் திருடிய நபர், பின்னர் வட்டவிளை முத்தாரம்மன் கோயிலில் வந்து திருடிச்செல்வது, அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த இரு கோயில்களிலும் ஒரே நபர் கைவரிசை காட்டியிருப்பது கண்காணிப்பு கேமரா மூலம் உறுதியாகியுள்ளது. இந்த கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : temples ,Amman ,Nagercoil , Nagercoil, goddess, temple, theft
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு