×

திருப்போரூரில் அமமுக பிரமுகர் கொன்று எரிப்பு; மனைவியை அபகரிக்க நினைத்ததால் கொன்றோம்: அடியாட்களாக இருந்த 3 சகோதரர்கள் வாக்குமூலம்

திருப்போரூர்:  திருப்போரூர் அருகே ரவுடியை கொன்று எரித்த வழக்கில், மனைவியை அபகரிக்க நினைத்ததால் கொன்றோம் என அடியாட்களாக இருந்த 3 சகோதரர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமம், பழண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (எ) சதீஷ்குமார் (39). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சாராய விற்பனை, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்பட 26 வழக்குகள் 10க்கு மேற்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் மேலையூர் மயானம் அருகே சதீஷை படுகொலை செய்து, உடல் எரிந்த நிலையில் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் பிரசாந்த் (எ) பட்டாபிராமன் (23), பரத் (எ) பத்மநாபன் (20), 17 வயது சிறுவன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக அடியாட்களாக இருந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்களை பிடித்து வந்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வந்தன. சகோதரர்கள், திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூரை சேர்ந்தவர்கள். அங்கு நிலப்பிரச்னையால், அவர்களது தாயாரின் ஊரான சிறுதாவூர் கிராமத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினர். அப்போது, சதீசை பற்றி அறிந்து, அவரிடம் தங்களது நிலப்பிரச்னையை தீர்த்து வைக்கும்படி கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ், 3 பேரையும் தன்னுடன் வந்து விடுமாறு கூறியுள்ளார். அதன் பேரில் அவருடன் சேர்ந்து, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டனர்.

விரைவில் ஒரு கொலை செய்ய உள்ளதாகவும், அதற்கு தனக்கு பதிலாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என சதீஷ் கூறியுள்ளார். இந்நிலையில் தங்களது நிலப்பிரச்னையில் சிலர், இவர்களது குடும்பத்தினரை கொல்ல முயற்சி செய்வதாக கூறிய சுரேஷ், இவர்களது தாய், மனைவியை அழைத்து வந்து தனது வீட்டின் மாடியில் குடி வைத்தார். ஆனால், 3 பேரையும் வீட்டுக்குள் விடவில்லை. பல காரணங்களை கூறி அவர்களை தடுத்து வைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பிரசாந்தின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அந்த தகவல், இவர்களுக்கு தெரிந்தது. இதையடுத்து நம் குடும்பத்தையே அழித்து விடுவார். என நினைத்து, சதீஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, சம்பவத்தன்று இரவு, அனைவரும் காரில் சென்று வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பின்னால் இருந்த 2 பேர், சதீஷின் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள, பிரசாந்த் கழுத்திலும், வயிற்றிலும் கத்தியால் குத்திக் கொன்றார்.

பின்னர் சடலத்தை இழுத்துச் சென்று மேலையூர் சுடுகாட்டில் வீசினர். பின்னர் காரை எடுத்துக் கொண்டு தப்ப முயற்சித்தபோது பதற்றத்தில் கார் அங்கிருந்த சிறு பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் அப்படியே போட்டு விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நிலப்பிரச்னையையும் தீர்க்காமல், மனைவியையும் அபகரிக்க நினைத்ததால் கொன்றனர் என வாக்குமூலத்தில் தெரியவந்ததாக, போலீசார் கூறினர்.

இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரை புழல் சிறையிலும், சிறுவனை காப்பகத்திலும் அடைத்தனர். பிரபல ரவுடி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் சிக்கியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திலேயே இருந்த 3 பேர்
கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அங்கு 3 பேரும் இருந்தனர். போலீசாரும் அவர்களை அழைத்து விசாரித்து அனுப்பி விட்டனர். பின்னர் தனித்தனியாக விசாரிக்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து துருவி துருவி விசாரித்து கைது செய்தனர்.


Tags : brothers ,Thiruporur , Murder and burning of a prominent figure in Thiruporur; We killed because we wanted to kidnap his wife: Confession of 3 brothers who were slaves
× RELATED அவமானங்கள்தான் தலைநிமிர வைத்துள்ளது!