உறவினருடன் பழகியதாக கூறி இளம் பெண்ணை தாக்கி 2 சவரன் செயின் பறிப்பு: பாஜ பிரமுகருக்கு போலீஸ் வலை

சென்னை: உறவினருடன் பழகியதாக கூறி வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தாக்கி 2 சவரன் செயின் பறித்து சென்ற பாஜ பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். சாலிகிராமம் தேவராஜ் நகர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சங்கீதா(34). கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், சென்னை பல்லாவரத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கும் தென் சென்னை பாஜ பிரமுகர் பாலாஜி என்பவரின் உறவினர் ஒருவருடன் நண்பராக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜ பிரமுகர் பாலாஜி நேற்று முன்தினம் நண்பர்களுடன் சங்கீதா வீட்டிற்கு சென்றுள்ளார். தனது உறவினருடன் பழக்கத்தை கைவிடும்படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சங்கீதாவை பாஜ பிரமுகர் சரமாரியாக அடித்து உதைத்து அவர் அணிந்து இருந்த 2 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘பாஜ பிரமுகர் பாலாஜி தன்னை தாக்கி 2 சவரன் செயினை பறித்து சென்றுவிட்டார்’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை தேடி வருகின்றனர்.

* தகராறை வீடியோ எடுத்தவருக்கு அடி

அசோக் நகர் சத்தியமூர்த்தி நகர் ஜான்கென்னடி தெருவை சேர்ந்தவர் ராஜி(எ) முத்துராஜ்(46). சினிமா கதாசிரியர். சின்னத்திரை சீரியல்களுக்கு கதை எழுதி வருகிறார். நேற்று முன்தினம் நண்பர் நடத்தும் யூ-டியூப் சேனல் அலுவலகத்திற்கு வந்தார். பிறகு முத்துராஜ் வீட்டிற்கு செல்லும்போது கீழ்தளத்தில் வசித்து வரும் சங்கீதாவை பாஜ பிரமுகர் தாக்கிய சம்பவத்தை பார்த்தப்படி தனது செல்போனில் பேசிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. முத்துராஜ் சிறிது தொலைவு சென்ற உடன், பாஜ பிரமுகர் தனது காரில் வந்து வழிமறித்து ‘நீ எங்களை வீடியோ எடுக்கிறாயா’ என கேட்டு முத்துராஜை சரமாரியாக அடித்து உதைத்து செல்போனை பறித்துகொண்டு காரில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துராஜ் கொடுத்த புகாரின் படி, விருகம்பாக்கம் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பாஜ பிரமுகர் பாலாஜி உட்பட அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>