×

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனாவால் தடுப்பூசிகள் வீணாகாது: விஞ்ஞானிகள் நம்பிக்கை

வாஷிங்டன்: ‘இங்கிலாந்தில் புதியதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரசால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் வீணாகாது,’ என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கடந்த ஓராண்டாக உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு, பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து இப்போதுதான் பயன்படுத்த தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இந்த தடுப்பூசிகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்தில் ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. மிகவும் அதிவேகமாக பரவக்கூடிய இதற்கு ‘VUI-202012/0’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தை 60க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ரத்து செய்து, அந்நாட்டை தனிமைப்படுத்தி இருக்கின்றன. இந்த புதிய வைரஸ், இங்கிலாந்தில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசிகள் பலன் தருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த ஜெரெமி பெரர் என்ற ஆய்வாளர் கூறுகையில், ‘‘உருமாற்றம் அடைந்திருக்கும் கொரோனா வைரஸ் பற்றி ஐரோப்பாவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. 60 வயதுக்குட்பட்டோரிடம் அறிகுறிகள் குறைவாகத் தெரிவது நோய் கண்டறிதலை சிக்கலாக்கி உள்ளது,’’ என்றார்.

தீபக் சாகெல் என்கிற விஞ்ஞானி கூறுகையில், ‘‘கொரோனா வைரசின் முள்புரதம் 13 விதங்களில் மாற்றம் அடைகிறது. இவற்றில் N501Y வைரஸ் மட்டுமே 70 சதவிகிதம் வேகமாகப் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் போன்ற தடுப்பூசிகள், கொரோனாவின் முள் புரதத்துக்கு எதிராக பல தளங்களில் எதிர்ப்பு சக்திகளை உடலில் உருவாக்கும் வகையில் தயாராகி உள்ளதாகவே அறிவித்துள்ளனர்.

எனவே, புதிய வைரசின் இந்த ஒற்றை மாற்றத்தால் தடுப்பூசியின் திறன் பாதிக்க வாய்ப்பில்லை. இது பருவ கால வைரசுகள், ஒவ்வொரு ஆண்டும் மாற்றமடைவதுபோல்தான். எனவே, அதற்கேற்றவாறு தடுப்பூசியின் திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றார். இதே கருத்தை வைரஸ் நிபுணரான உபாசனா ரேவும் கூறியுள்ளார்.

‘‘புதிய வைரசால் ஆபத்து என்பதோ, நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதோ, உயிரிழப்பு ஏற்படும் என்பதோ நிரூபிக்கப்படவில்லை. இப்போதைக்கு மாற்றமடைந்த வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுபற்றி ஆய்வுகள் செய்ய வேண்டும். வேறு எந்த குழப்பமும் தேவையில்லை,’’ என்கிறார் இவர்.

மாற்றம் கண்டால் ஆபத்து
‘சாதாரண ப்ளு வைரஸ் போல், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக மாற்றம் அடையவில்லை என்பதும் நம்பிக்கைத் தரும் செய்தியாக உள்ளது. இந்த வைரஸ் மேலும் மேலும் பல மாற்றங்களை சந்தித்தால் மட்டுமே தடுப்பூசி தயாரிப்பில் எச்சரிக்கை தேவை,’ என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



Tags : scientists ,UK , Vaccines will not be wasted by the new corona that has transformed the UK: scientists hope
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...