×

நிபந்தனைகளை ஏற்பதாக தெரிவித்ததால் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி

சென்னை: நிபந்தனைகளை ஏற்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததால், பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று உடமைகளை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 1976ம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், தனது இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம்  தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து இளையராஜா, 17வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் ஸ்டுடியோவில் உள்ள தன் இசை கோர்ப்புகள், இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுக்க மற்றும் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோ தரப்பு இளையராஜாவை அனுமதிக்க நிபந்தனை விதித்தது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோவின் நிபந்தனைகளின்படி, கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும், இடத்திற்கு உரிமை கோர மாட்டேன் என்றும் இளையராஜாவின் தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பிரமாண பத்திரமாக இல்லாமல் மெமோவாக மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வக்கீல், 1000 படங்களுக்கும் மேலாக இசையமைத்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் இளையராஜா எப்போதும் வார்த்தை தவறியதில்லை. கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இளையராஜா தரப்பு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார், ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யலாம்.

உடமைகளை எடுத்துவரலாம். இளையராஜாவுடன் அவரது ஒரு உதவியாளர் மற்றும் இரண்டாம் இசை உதவியாளர்கள் செல்லலாம். இதற்காக சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் ஆணையராக வி. லட்சுமிநாராயணன் என்பவரை நியமித்துள்ளோம். பொருட்களை எடுக்கும் தேதி குறித்து இரு தரப்பு வக்கீல்களும் பேசி முடிவு செய்ய வேண்டும் பொருட்களை எடுக்க இளையராஜா வருகிற நாளில் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமென பிரசாத் ஸ்டுடியோ கோரிக்கை வைத்திருந்ததால், உரிய பாதுகாப்பு வழங்க சென்னை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Prasad ,Ilayaraja ,studio , Ilayaraja was allowed to enter Prasad's studio as he agreed to the conditions
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...