×

தபால் வாக்கு விவகாரம் தேர்தல் விதிகள் திருத்தத்தை எதிர்த்து திமுக வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை

சென்னை: சட்டப் பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தும் விதிகள் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக எந்த வற்புறுத்தலும் இல்லாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவுபடுத்துகிறது. இந்த சட்டப்பிரிவு 60(சி) சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு அரசின் ஆலோசனை பெற்று அதன் பிறகுதான் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆனால், எந்த முன்னறிவிப்போ ஆலோசனையோ இல்லாமல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 60(சி)ல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் விதி 27 ஏ முதல் 27 எல் வரை திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, அடையாளம் காணப்படும் வாக்காளர் என்ற சரத்து சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தால் போலி வாக்குகள் பதிவாகும். அடையாளம் காணப்படும் வயதானவர்களின் வாக்குகளை ஆளும் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். வருவாய்துறை அதிகாரிகள் கூட்டுடன் வயது தொடர்பான சான்றுகள் மாற்றப்பட்டு அது தபால் வாக்குகளாக ஆளும்கட்சிக்கு சாதகமாக மாற்ற வாய்ப்பு ஏற்படும்.

தேர்தலில் வாக்களிப்பவர்களில் 80 வயதுடையவர்களை எப்படி வகைப்படுத்த முடியும். அதற்கான முன் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் வெறும் அறிவிப்பின் அடிப்படையில் வயது நிர்ணயம் செய்வது சட்டவிரோதமானது. வயது முதிர்ந்தவர்கள்தான் தேர்தலில் ஒழுங்காக வாக்களிக்கும் நிலை உள்ளபோது தேர்தல் நடத்தும் விதிகளில் திருத்தம் செய்து அவர்களை தபால் வாக்குபோட வைப்பது உண்மையான தேர்தல் நடத்துவதாகாது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 60(சி) மற்றும் தேர்தல் நடத்தும் விதிகள் 27ஏ முதல் 27எல்வரை திருத்தம் செய்தது அரசியமைப்புக்கு எதிரானது. சட்ட விரோதமானது. எனவே, இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசின் 2019 அக்டோபர் 22 மற்றும் 2020 ஜூன் 19ம் தேதியிட்ட சட்ட திருத்த அறிவிப்பாணை மற்றும் தமிழக தேர்தல் அதிகாரியின் 2020 செப்டம்பர் 17மற்றும் 22ம் தேதியிட்ட அறிவிப்பாணைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இதே கோரிக்கைகளுடன் தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிப்பதற்காக விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : DMK ,hearing ,Chennai iCourt , Postal case: DMK case against amendment of election rules: Chennai iCourt hearing
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...