×

கர்நாடக மாநிலத்தில் ஜன.1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: கல்வியமைச்சர் சுரேஷ்குமார் உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் திறக்க அரசு முடிவு செய்ததில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வியமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.  மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 7 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் டிகிரி கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. கல்லூரிகள் தொடங்கி ஒரு மாதம் முடிந்தும் கொரோனா தொற்றுக்கு மாணவர்கள் யாரும் பாதிக்கவில்லை.

அதை அடிப்படையாக வைத்து வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டாமாண்டு பியூசி வகுப்புகள் தொடங்க அரசு முடிவு செய்ததுடன் 6 முதல் 9ம் வகுப்பு வரை வித்யகாமா திட்டத்தில் வகுப்பு தொடங்கவும் முடிவு செய்தது. இந்நிலையில் நேற்று மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயலாளர்களுடன் கல்வியமைச்சர் சுரேஷ்குமார் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது,
மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்த நிலையில் கடந்த ஜூன் 25ம் தேதி தொடங்கி ஜூலை 4ம் தேதி வரை பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு நடத்தினோம். இந்த தேர்வு வெற்றி கரமாக நடத்தி முடிக்க மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயலதிகாரிகள் உள்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். அந்த வெற்றியை அடிப்படையாக வைத்து மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காமல் இருக்கும் வகையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளிகள், முதல்நிலை கல்லூரிகள் திறக்க முடிவு செய்துள்ளோம்.

இதனிடையில் உருமாற்ற கொரோனா தொற்று பரவல் தலைதூக்கியுள்ளதால், பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்ற நோக்கத்தில் மாநில கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனை குழு மற்றும் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஆகியோரிடம் கேட்டபோது, உருமாற்ற கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் படிக்கவரும் மாணவர்களின் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று உறுதி செய்தனர். அதையேற்று வரும் 1ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டாமாண்டு பியூசி வகுப்புகள் தொடங்கப்படும். அதேபோல் வித்யகாமா திட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்புகளும் தொடங்கப்படும். பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் கொண்டுவர வேண்டும். கடிதம் கொண்டுவராத மாணவர்களை வகுப்பில் சேர்க்கப்படாது. மாணவர்கள் ேகாவிட்-19 விதிமுறை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஜனவரி 1ம் தேதிக்கு முன் 72 மணி நேரத்தில் முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொண்டு அதில் நெகடிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். இது மாணவர்களின் உடல் நலத்திற்கு மாநில அரசின் பாதுகாப்பு அம்சமாகவுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டாமாண்டு பியூசி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதில் மாணவர்கள் கட்டாயம் பள்ளி, கல்லூரிக்கு வரவேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. மாணவர்கள் விரும்பினால் வரலாம். அல்லது ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்பில் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்படும். இந்த விஷயத்தில் மாணவர்களின் சுதந்திரத்தை அரசு தடுக்காது என்றார்.



Tags : schools ,colleges ,Suresh Kumar ,Karnataka , First schools and colleges to open in Karnataka on January 1: Education Minister Suresh Kumar
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...