ஏ.பி.எம்.சி. வியாபாரிகளின் பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

பெங்களூரு: ஏ.பி.எம்.சி. வியாபாரிகளின் பிரச்னைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தின் போது முதல்வரிடம் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் தெரிவித்தார். பெங்களூரு எப்.கே.சி.சி.ஐ. அலுவலகத்தில் ஏ.பி.எம்.சி. வியாபாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சோமசேகர் பேசியதாவது: ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்குள் எந்த மாதிரி வரி இருக்கிறதோ அதே போல் வெளியேயும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வருடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். அதே போல் ஏ.பி.எம்.சி. சட்டத்திருத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். தற்போது யாருக்கும் நான் உறுதி அளிக்க முடியாது.  28-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் வியாபாரிகளின் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தி யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். நான் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரத்தில் விவசாயிகள், வியாபாரிகள் தங்களின் பல்வேறு பிரச்னைகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று தீர்வு ஏற்படுத்தி கொடுக்கப்படும். ரூ.1.30 பைசாக இருந்த ஏ.பி.எம்.சி. வரியை ஒரு ரூபாயாக ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடியூரப்பா வரியை 35 பைசாவுக்கு குறைந்து தீர்மானம் செய்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு ரூ. 500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏ.பி.எம்.சி.க்கு சொந்தமான 8500 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்திப்பள்ளி பகுதியில் 15 ஏக்கர் நிலம் கிடைக்காமல் உள்ளது.  இதனால் மார்க்கெட் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏ.பி.எம்.சி. மூடப்படும் என்று சிலர் தவறான கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் எந்த உண்மையும் கிடையாது என்றார்.

Related Stories:

>