×

வடகிழக்கு பருவமழை முடியும் நிலையில் சாத்தனூர் அணை முழுமையாக நிரம்புமா?.. 3 மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை: வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டுமா என 3 மாவட்ட விவசாயிகள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் உள்ள முக்கியமான அணைகளில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணை குறிப்பிடத்தக்கது. நீர் கொள்ளளவில், மாநில அளவிலான அணைகளின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த அணையை நம்பி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது. சாத்தனூர் அணையின் மொத்த உயரம் 119 அடி. நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி.

சாத்தனூர் அணை முழுமையாக நிரம்பினால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 17,641 ஏக்கர் பரப்பளவிலும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 43 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் விவசாய சாகுபடி நடைபெறும். அதோடு, சாத்தனூர் அணையின் வலதுபுற கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரால் 48 ஏரிகளும், இடதுபுற கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரால் 40 ஏரிகளும் நிரம்பும். திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும். விவசாய பாசனம் மட்டுமின்றி, சாத்தனூர் அணையை சார்ந்து குடிநீர் திட்டங்களும் உள்ளன.

திருவண்ணாமலை, செங்கம், புதுப்பாளையம், தானிப்பாடி, லாடவரம், வானாபுரம் மற்றும் 208 கிராமங்களின் குடிநீர் தேவை இந்த அணையை நம்பியே இருக்கிறது. இந்நிலையில், சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில், நேற்று மாலை நிலவரப்படி 99.95 அடி மட்டுமே நிரம்பியிருக்கிறது. அதோடு, மொத்த நீர் கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில், தற்போது 3,747 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவில் 51 சதவீதம் மட்டுமே நிரம்பியிருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28ம்தேதி தொடங்கி, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பிறகு, மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எதிர்பாராமல் உருவான நிவர் புயல், புரெவி புயல் காரணமாக பெய்த மழையும் அணை நிரம்பும் அளவில் கை கொடுக்கவில்லை. சாத்தனூர் அணை நிரம்புவதற்கு, தென்பெண்ணை ஆற்றின் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வேண்டும். அதற்கு, கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்ய வேண்டும். ஆனால், தென்பெண்ணை வழியாக நீர்வரத்து இல்லை. தற்போதைய நிலவரப்படி, வினாடிக்கு 22 கன அடி மட்டுமே அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது சாத்தனூர் அணை பாதியளவு மட்டுமே நிரம்பியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்குள் அணை முழுமையாக நிரம்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால், திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



Tags : Sathanur Dam , Northeast Monsoon, Sathanur Dam, Farmers
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்...