×

நெற்பயிரில் பச்சையத்தை அழிக்கிறது; மதுரையில் ‘ஆப்பிரிக்கன் நத்தை’ படையெடுப்பு: விவசாயிகள் வேதனை

மதுரை: மதுரையில் ஆப்பிரிக்கன் நத்தைகள் படையெடுத்து, வாழை, நெல்லில் பச்சையத்தை உட்கொள்வதால் விவசாயம் பாதித்துள்ளதாக விவசாயி வேதனையுடன் கூறினார். திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி நவநீதகோபாலகிருஷ்ணன். இவர் பரவையில் 10 ஏக்கரில் நெல். 3 ஏக்கரில் ஒட்டுவாழை பயிரிட்டுள்ளார். வாழை தற்போது தார்போடும் (பூப்பூத்து காய்காய்க்கும்) பருவத்தில் உள்ளது. கடந்த ஒரு மாதமாக இவரின் வாழையில் புதுவிதமான நத்தைகள் திடீரென்று வாழையின் மேல் ஏறி, இலையை கடித்து தின்றது. ஆரம்பத்தில் அவர், அதனை சரியாக கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில், பல ஆயிரக்கணக்கான நத்தைகள் குட்டிப்போட்டு பெருகி, 3 ஏக்கர் வாழை மரத்திலும் ஏறி, இலையை தின்று அழிக்க ஆரம்பித்தன. இதனை கண்டு விவசாயி அதிர்ச்சியடைந்தார். தினமும் ஒவ்வொரு வாழை மரத்தில் உள்ள நத்தையை அப்புறப்படுத்தினாலும் அதனை அவரால் அழிக்க முடியவில்லை. இந்த புதுவித நத்தை படையொடுப்பால், வாழை முழுவதும் நாசமாவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வாழையில் பெருகி இருந்த நத்தைகள் தற்போது நெல் பயிரிலும் ஊடுருவி, நெற்பயிரில் உள்ள பச்சையத்தையும் சாப்பிடத்தொடங்கி உள்ளன. இதுதொடர்பாக வேளாண்மை, தோட்டக்கலைத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் நேற்று பார்வையிட்டனர். இது ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஆப்பிரிக்கன் நத்தைகள். இது பச்சையான இலை, கொடிகளை முழுமையாக சாப்பிட்டு உயிர் வாழும். சமீபத்தில் இவ்வகையான நத்தைகள் கேரளாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது எப்படி மதுரைக்கு வந்தது என தெரியவில்லை. இதனை அழிக்க, ஆலோசனை வழங்கியுள்ளனர். நவநீதகோபாலகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ஆப்பிரிக்க நத்தை என வேளாண்மைத்துறையினர் கூறுகின்றனர். இது நாளுக்குநாள் நூற்றுக்கணக்கில் குஞ்சு பொறித்து பெருகி வருகிறது. தற்போது வாழையில் பரவியிருந்த இந்த நத்தை, தற்போது நெற்பயிரிலும் பரவி வருகிறது.

இந்த நத்தையால், இலை பரிச்சல் இல்லாமல் போய்விட்டது. முன்பு வாரந்தோறும் 12 இலைக்கட்டு அறுப்பேன். தற்போது, 5 இலைக்கட்டு கூட கட்டமுடியவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அழிக்க சுண்ணாம்பு, உப்பு, ஹரத்தேன் என்ற மருந்து கலந்து அடிக்கும்படி வேளாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்,’’என்றார்.


Tags : invasion ,African ,Madurai , Destroys greenery in rice; ‘African snail’ invasion in Madurai: Farmers suffer
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு