தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.10.36 கோடியில் மரக்கன்றுகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.10.36 கோடியில் 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இது  குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் தொழில் பூங்காக்கள் உள்ள இடங்களை  மேம்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசுக்கு துணை நின்று,  பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது.

தமிழகத்தில் 33,776 ஏக்கர் நிலப்பரப்பளவில், 15 மாவட்டங்களில், 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட 23 தொழில் பூங்காக்களுடன்  தொழில் வளர்ச்சி நிறுவனங்களில் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் கடந்த 2019ம்  ஆண்டு, ஜூலை மாதம், அனைத்து தொழில் பூங்காக்களிலும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை சரிவர பேணி, திரும்பும் திசையெல்லாம்  பச்சைப்பசேலென செடிகளும், செடிகள் வளர்ந்த நிலையில் மரங்களும் மேற்கொண்டு வருகின்றது.

அரசின் வனத்துறையால் தோட்டத்தில் வைத்து வளர்க்கப்படும் மரக்கன்றுகளில், 2.60 லட்ச மரக்கன்றுகளை ரூ.10 கோடி செலவில், 19 தொழிற்  பூங்காக்களில் நடுவதற்குத் திட்டமிடப்பட்டு, இதுவரையில் ஏறத்தாழ 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. செய்யாறு, ராணிப்பேட்டை, கடலூர்,  ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், ஓசூர், நிலக்கோட்டை, சிறுசேரி, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட 18 தொழிற்பூங்காக்களில் உள்நாட்டு உள்ளூர் மரக்கன்று  வகைகளான, வேம்பு, புளிபுங்கன், மருது, நீர்மருது, நீர்மத்து, பூவரசு, ஆல், நாவல், ஐம்பு நாவல், கொய்யா, மா, தான்றி, மரமல்லி, கொடுக்காபுளி,  சொர்கம்,

அரசு, மகாகனி, இலுப்பை, சில்வர் ஓக், அசோகா, இயல்வாகை, ஆயன், மந்தாரை, வசந்தமல்லி, பாசடி, பாதாம், நெல்லி, பலா, வாகை, ஆவி,  தூங்குவகை ஆகிய முப்பத்திரண்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மரக்கன்றுகளும் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்  முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பட்ட  மரக்கன்றுகளை வளர்த்து பாதுகாக்கும் பொறுப்பையும் சிப்காட் நிறுவனம்  மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>