திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் விவாகரத்து கேட்டு மனைவிக்கு பாஜ எம்பி நோட்டீஸ்

கொல்கத்தா: மனைவி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் அவரிடம் விவாகரத்து கேட்டு பாஜ எம்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  மேலும், ‘கான்’ குடும்ப பெயரை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாத  வாக்கில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கடும் மோதல்கள் ஏற்பட்டு  வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநில பாஜக இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான சவுமித்ரா கான் என்பவரின் மனைவி சுஜாதா கான் திடீரென  திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் சவுமித்ரா கான் தனது மனைவியின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.  இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து சவுமித்ரா கான் கூறுகையில், ‘எனது  குடும்பத்தை உடைத்தவர்களை (திரிணாமுல் காங்கிரஸ்) நான் மன்னிக்க மாட்டேன். ‘கான்’ என்ற என்னுடைய குடும்பப்பெயரை அவர் (மனைவி  சுஜாதா) பயன்படுத்தக் கூடாது.

சுஜாதாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டேன். அவரது பெயருடன் ‘கான்’ என்ற எங்கள் குடும்ப பெயரை சேர்த்து யாரும்  அழைக்க வேண்டாம். சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடையும்’ என்றார். இவரது பேட்டிக்கு பதிலளித்த சுஜாதா, ‘தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் நுழையும் போது, ​​அது உறவுக்கு மோசமாகிவிடுகிறது. அவர் (கணவர்  சவுமித்ரா கான்) பாஜகவைச் சேர்ந்த கெட்டவர்களின் சகவாசத்தில் உள்ளார். எனக்கு எதிராக அவரை பயன்படுத்தி வருகின்றனர். ‘தலாக்கை’  ஒழித்த கட்சி (பாஜக), இன்று என்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிடுமாறு கணவரிடம் கூறிவருகிறது’ என்றார்.

Related Stories:

>