ஆவடியை அடுத்த நடுகுத்தகை ஊராட்சி திமுக சார்பில் கிராம சபை கூட்டம்: டி.ஆர்.பாலு பேச்சு

சென்னை: ஆவடியை அடுத்த நடுகுத்தகை ஊராட்சி திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கே.ஜெ.ரமேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, தொடங்கி வைத்து பேசியதாவது:- திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்துரிமை, மகளிர் சுய உதவி குழு அமைத்தல், உள்ளாட்சிகளில் 33சதவீத இட ஒதுக்கீடு, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் என கணக்கிலடங்காத பல மக்கள் நலத்திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தினார். ஆனால், கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் செய்த பல கோடி ஊழல்கள் செய்து உள்ளனர்.

இது குறித்த பட்டியலை தலைவர் ஸ்டாலின் நேற்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து 96 பக்கங்கள் கொண்ட ஊழல் பட்டியலை ஆதாரப்பூர்வமாக கொடுத்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அதிமுக கொள்ளை கும்பலை விரட்டும் காலம் நெருங்கிவிட்டது. வரும் தேர்தலில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும். இன்னும் 120 நாள்களில் தமிழகத்தில், மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர்வது நிச்சயம் என்றார்.

இறுதியில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற உறுதிமொழி பொதுமக்கள் மத்தியில் ஏற்கப்பட்டது. கூட்டத்தில், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவரும், பூந்தமல்லி ஒன்றிய செயலாளருமான டி.தேசிங்கு, பொதுக்குழு உறுப்பினர் எம்.ராஜி, பூந்தமல்லி ஒன்றிய குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் யமுனா ரமேஷ், ஊராட்சித்தலைவர் லெட்சுமி, துணைத்தலைவர் செந்தாமரை, ஊராட்சி செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>