பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்தா?.. பிரிட்டன் அமைச்சர்கள் விளக்கம்

லண்டன்: ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வார் என பிரிட்டன் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இந்தியாவின் 72-வது அடுத்த குடியரசு தின விழா 2021 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனிடையே கடந்த மாதம் பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையேயான தொலைபேசி உரையாடலின்போது, 2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க போரிஸ் ஜான்சனுக்கு மோடி அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, குடியரசு விழாவில் கலந்து கொள்ள போரிஸ் ஜான்சன் சம்மதித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக இருந்தது. கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், வீரியமாக இருப்பதாவும் தெரியவந்தது.

நிலைமை கைமீறிப் போய்விட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்நிலையில், புதிய கொரோனா எதிரொலியாக இந்திய பயணத்திட்டத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதன் எதிரொலியாக போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்தபடி டெல்லி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள லார்டு தாரிக் அகமது; இந்தியாவுடன் பலமான உறவை தொடர வேண்டும் என பிரிட்டன் உறுதி பூண்டுள்ளதால் போரிஸ் ஜான்சன் நிச்சயம் இந்திய பயணத்தை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

Related Stories: