×

கிணறு வெட்டிய விவசாயிகள் கண்ணீர்: புயல் மழையால் மண் சரிந்து மூடியது

போளூர்: ஜவ்வாது மலையில் கடன் வாங்கி கிணறு வெட்டிய 80 விவசாயிகளின் கிணறு  அரசு பில் தொகை கிடைக்கும் முன் புயலில் இடிந்து விழுந்ததால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் விவசாயத்தை ஊக்கப்படுத்த கடந்த 2019-2020ம் நிதியாண்டில் 2 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள மலைவாழ் விவசாயிகள் 330 பேரை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தனிநபர் கிணறு வெட்டும் திட்டத்தில் தேர்வு செய்தனர். ஒரு தனிநபர் கிணறுக்கு ரூ.5.93 லட்சம் என 330 கிணறுகளுக்கு ரூ.19.56 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டது.

இதில், கிணறு வெட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50 சதவீத தொகையும், மீதமுள்ள 50 சதவீத தொகை கட்டுமான பொருட்கள் வாங்குவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகள் பில் தொகையை அரசு தந்துவிடும் என்று நம்பி ஆடு, மாடுகளை விற்றும் கடன் வாங்கியும் கிணறு வெட்டினர். கிணறு வெட்டும் பணி முடிந்து பல விவசாயிகள் சுற்றுச்சுவர் அமைத்துவிட்டனர். ஒரு சில விவசாயிகள் பணம் வந்தால் சுற்றுச்சுவர் கட்டி விடலாம் என சுற்றுசுவர் கட்டவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிவர், புரெவி புயல்கள் காரணமாக பெய்த கனமழையில் சுவர் கட்டாத 80 விவசாயிகளின் கிணற்றின் கரைகள் சரிந்து விழுந்து மூடிக்கொண்டது. இதுபோன்ற கிணறுகளுக்கு பில் தொகை வழங்க முடியாது என அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர். பில் தொகை வாங்குவதற்கு முன்பே கிணறு இடிந்து விட்டதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘ஜமுனாமரத்துர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஆலோசனையின்படி கிணறு வெட்டினோம். ஒரு சிலருக்கு முதல் தவணை மட்டும் வழங்கப்பட்டது. கடன் வாங்கி வெட்டப்பட்ட கிணறு இப்படி திடீரென இடிந்து விட்டது. இதனால், எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுக்க சென்றால், ‘உங்களுக்கு நிவாரணம் கிடைக்காது’ என கூறி மனுவை வாங்க மறுக்கின்றனர். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்து வருவதால் மனவேதனையில் இருக்கிறோம்’ என்று கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மலைவாழ் மக்கள் விவசாயத்தை ஊக்குவிக்க தனிநபர் கிணறு திட்டம் மூலம் 2 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கிணறு வெட்ட ரூ.5.93  லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் கிணறு வெட்ட மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் பாதியும், மீதம் தொகை கட்டுமான பணிக்கும் வழங்கப்படுகிறது. இதுவரை 70 பேர் பணிமுடித்துள்ளனர். 15 பேருக்கு முழு பில் தொகை வழங்கப்பட்டுள்ளது. 55 பேருக்கு பாதித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான தொகை வழங்க வேண்டியுள்ளது. இன்னும் 120 பேர் அறைகுறையாக பணி செய்துள்ளனர். அரசு தரப்பில்  பணம் வரும் போது உடனடியாக தந்துவிடுகிறோம். இதுவரை ரூ.7 கோடி வரை கொடுத்துள்ளோம். அரசு தரப்பில் பணம் வந்து 4 மாதங்களுக்கு மேலாகிறது. விரைவில் தொகை வந்த உடன் கிணறு பணி முடித்தவர்களுக்கு வழங்கப்படும்.

கிணறு தோண்டி பாதியில் நிற்பவர்கள் பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் தான் அதனை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கி  மீண்டும் கிணறு வெட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Farmers
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...