×

பராமரிப்பில்லாததால் உருக்குலையும் நினைவுச்சின்னங்கள்: புயல் அழித்த தனுஷ்கோடியில் பொலிவிழக்கும் பொக்கிஷங்கள்

ராமேஸ்வரம்: புயலால் அழிந்த தனுஷ்கோடி நகரை புதுப்பிக்க மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படாததால், தொடரும் இயற்கை சீற்றத்தினால் சேதமடைந்து பொலிவிழந்து வருகிறது. ராமேஸ்வரத்தின் தென்பகுதி முனையில் இரு கடல்கள் சங்கமிக்கும் தனுஷ்கோடி கடந்த நூற்றாண்டில் சிறந்த துறைமுக வர்த்தக நகராக விளங்கியது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியா - இலங்கை இடையே பாக் ஜலசந்தி கடலில் கப்பல் போக்குவரத்தை துவக்கும் வகையில் 1914ல் தனுஷ்கோடி வடக்கு கடற்கரையில் துறைமுகம் கட்டிமுடிக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டது. இர்வின், கோஷின் என்ற பெயரில் இரு நீராவிக் கப்பல்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே இயக்கப்பட்டது.

கப்பல் போக்குவரத்து துவங்கி 50 ஆண்டுகள் சிறந்த துறைமுக நகராக விளங்கிய தனுஷ்கோடி நகரம், ஒரே நாள் இரவில் வீசிய புயலால் அழிந்துபோனது. 1964, டிச. 18ம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் டிச. 23ல் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் தனுஷ்கோடியை தாக்கியதில் அனைத்தும் உருக்குலைந்து போனது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை வீசிய புயலால் தனுஷ்கோடி நகரமே கடலில் மூழ்கியதால் வீடுகளுக்குள் உறக்கத்தில் இருந்தவர்கள், பாம்பனில் இருந்து ரயிலில் பயணித்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஆக்ரோஷமான அலையில் சிக்கி பலியாகினர்.

புயலில் உருக்குலைந்த தனுஷ்கோடியில் இடிந்த கட்டிடங்கள் சில, புயலின் கோரத்தை நினைவூட்டும் வகையில் நிற்கிறது. தனுஷ்கோடியில் புயலடித்து 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நகரை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளும் தனுஷ்கோடியில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்தி போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தன.

மத்திய அரசால் ரூ.60 கோடியில் முகுந்தராயர்சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட சீசனில் கடலரிப்பினால் சேதமடையும் சாலையை சீரமைக்க ஒவ்வொரு ஆண்டும் சில கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்படுவதால் கான்ட்ராக்ட் நிறுவனங்களும், அதிகாரிகளும் வருவாய் பார்க்கும் திட்டமாக மாறியுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கருத்தினையும் ஏற்காமல் அரிச்சல்முனை வரை சாலை அமைத்ததால் மன்னார் வளைகுடாவில் வாழும் அரியவகை ஆமைகளின் இனப்பெருக்க சூழலியலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் போக்குவரத்து துவக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் அதற்கான எந்தவித நடவடிக்கையும் ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ள வில்லை.

தனுஷ்கோடியில் புயலினால் சேதமடைந்த கட்டிடங்களை, இருக்கின்ற நிலையில் பொக்கிஷம் போல பாதுகாத்து நினைவு சின்னமாக்கி, தனுஷ்கோடி குறித்த ஒலி ஒளிக்காட்சி அரங்கு, கண்காட்சியகம், சுற்றுலா பயணிகள் ஒய்வு அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். மினி பேருந்து போக்குவரத்து துவங்கப்படும் என தமிழக அரசு அதிகாரிகளால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆய்வு பணிகளும் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படவில்லை. தனுஷ்கோடி செல்லும் சுற்றுலா பயணிகள் வெயிலுக்கு ஒதுங்கி நிற்க நிழற்குடை கூட இல்லாமல், கழிப்பிட வசதியில்லாமலும் சிரமப்படுகின்றனர்.

புயலடித்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில் தனுஷ்கோடியில் சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. இதனால் ஆண்டுதோறும் இப்பகுதியில் ஏற்படுரும் கடல் சீற்றம், காற்று, புயல் போன்ற இயற்கை சீற்றத்தினால் புயலின் எச்சங்களாய் நிற்கும் உடைந்த கட்டிடங்கள் மேலும் சேதமடைந்து பொலிவிழந்து வருகிறது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்திட வேண்டும் என்பதே இன்றைய நாளில் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Dhanushkodi , Rameswaram
× RELATED தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை…கடலில் நீந்திய வாண்டுகள்