×

28 ஆண்டுகளுக்கு பின் நிலைநாட்டப்பட்ட நீதி.. கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி- க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

கோட்டயம்: கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோரை முக்கிய குற்றவாளிகளாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

28 ஆண்டுகளுக்கு முன்

*கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா. கோட்டயம் செயின்ட் பயஸ் கான்வென்டில் தங்கியிருந்த இவர் கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி (அப்போது அபயாவுக்கு வயது 19) அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார்.

*இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

*ஆனால், அபயா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை ஆர்வலரான ஜோமோன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போராட்டம்

*இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் அபயா தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2வதாக நியமிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த சிபிஐ குழு விசாரணையில், அபயா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

*ஆனால் அவர்களால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து 3வது சிபிஐ குழு நடத்திய விசாரணையில், கன்னியாஸ்திரி அபயாவை கொலை செய்த சம்பவத்தில் பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேரையும் கைது செய்தது.

*கன்னியாஸ்திரி செபியுடன் பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் ஆகியோர் தகாத உறவு வைத்திருந்தனர். சம்பவத்தன்று இதை கன்னியாஸ்திரி அபயா பார்த்து விட்டதால் வெளியே சொல்லி விடுவாரோ என பயந்து, அவர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர்.

 பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் விடுதலை

*இந்த நிலையில் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் கைதான 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயிலை மட்டும் 2018ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த நிலையில் கொலை நடந்து 27 ஆண்டுகளுக்குப்பின் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.

2 பேர் குற்றவாளி என தீர்ப்பு!!

 விசாரணை முடிந்த நிலையில், கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோரை முக்கிய குற்றவாளிகளாக திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்ற நீதிபதி நேற்று அறிவித்தார். இவ்விருவருக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,  பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



Tags : Abaya ,Kerala ,nun , Kerala Nun, Abhaya, Murder, Judgment, Priest, Nun
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...