×

இந்தியர்கள் யாருக்கும் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு இல்லை... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டவட்டம்

புனே : பிரிட்டனில் தீவிரமாக பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் இதுவரை பரவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து இந்தியாவில் வரும் பயணிகளுக்கு கட்டாய ஆர்டி பிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ஆனால் இந்தியாவில் பெறப்பட்ட மாதிரிகள் எதிலும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று ஐசிஎம்ஆர் உறுதிப்படுத்தியுள்ளது. பொதுவாக நுண்ணுயிரிகள் அனைத்துமே சூழலுக்கு ஏற்றபடி மாற்றம் அடையும் தன்மை கொண்டவை என்பதால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று ஐசிஎம்ஆர் இயக்குனர் மருத்துவர் சமீரன் கூறியுள்ளார்.

மேலும் டாக்டர் சமீரன் பண்டா கூறியதாவது,உருமாற்றம் அடைந்த வைரஸால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தெரியவில்லை.அது பற்றி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.அதேநேரம் இந்தியாவில் ஏற்கனவே எடுக்கப்பட்ட கொரோனா மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம்.6 -7 மாதங்களாக எடுக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட சளி மாதிரிகளில் நாங்கள் நடத்திய வைரஸ் மரபணு ஆய்வில்,  உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்படவில்லை, என்றார். தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள மாதிரிகளில் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் இருப்பு கண்டறியப்படவில்லை என்றாலும் மருத்துவத் துறை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்லபட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Indians ,Medical Research Council of India , Indians, Medical Research Council of India, Project
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...