×

இப்போது இது தேவையா ?.. ரூ.13,450 கோடியை வீணடிக்க வேண்டாம்.. புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணியை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம்

டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணியை கைவிட வலியுறுத்தி முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இடவசதியும் இல்லை.எனவே, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கட்டுமான பணிக்கு தடை விதித்தது.

 இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.அதன்படி, புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு டிசம்பர் 10ம் தேதி பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, பூமி பூஜை தொடக்கிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பொருளாதார தேக்கநிலை இருக்கும் நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து புதிய நாடாளுமன்றம் தேவையா என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டம், அது செயல்படுத்தப்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர். அரசியல் சாசன நடத்தை குழு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்,  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜவகர் சர்கார், ஜாவித் உஸ்மானி, சக்சேனா, அருணா ராய் உள்ளிட்ட 69 ஓய்வுபெற்ற அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

அக்கடிதத்தில்,இந்த திட்டத்திற்கு ரூ.13,450 கோடி என திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வரும் இந்த நேரத்தில் ரூபாய் 13 ஆயிரம் கோடியை வீணாக்க வேண்டாம். புதிய நாடாளுமன்றம், துணை குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், கட்டுவதில் பிடிவாதம் பிடிப்பது அதிகாரத்தின் ஆணவத்தை காட்டுவதாக உள்ளது. நாடு கடினமான பொருளாதார சூழலில் இருக்கும்போது, கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கும்போது, இந்த திட்டத்துக்கு அரசு இவ்வளவு பெரும் தொகையை செலவிடுவது ஏன்?. இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டவிதமும் கவலையை ஏற்படுத்துகிறது. மேலும், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு முறைப்படி ஜனாதிபதிதான் அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும். தவிர, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அடிக்கல் நாட்டப்பட்டது நீதிமன்றத்தை மீறிய செயல்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Modi ,parliament , Rs.13,450 crore, construction of new parliament, work, Prime Minister Modi, letter
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...